சிறுமி கடத்தல் விவகாரத்தில் திருப்பம்! 11 வயதான சிறுவனை மீட்ட பொலிஸார்

Report Print T.Chandru in சமூகம்

தலவாக்கலையில் ஐந்து வயது சிறுமி கடத்தப்பட்ட் சம்பவத்தில் திருப்பமாக 11 வயதான சிறுவன் ஒருவனை நுவரெலியா பொலிஸார் இன்று மீட்டுள்ளனர்.

விதுர்ஷன் என்ற 11 வயது சிறுவனே இவ்வாறு பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மீட்கப்பட்ட குறித்த சிறுவனை எதிர்வரும் 14ம் திகதி வரையில் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுமியொருவரை கடத்திய சம்பவம் தொடர்பில் அண்மையில் தலவாக்கலை லிந்துலை நகரசபையின் தலைவர் அசோக சேபால மற்றும் தலவாக்கலை லிந்துலை நகரசபையின் உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட மேலும் மூன்று பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், கடத்தப்பட்டதாக கூறப்படும் சிறுமியின் தாய், சிறுமியின் வளர்ப்பு தாய், சிறுமியின் தந்தை என மேலும் பலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரின் வீட்டில் இருந்து இன்று காலை 11 வயதான குறித்த சிறுவனை பொலிஸார் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட சிறுவனுக்கு பிறப்பு அத்தாட்சி, இல்லை எனவும், குறித்த சிறுவனை சட்டவிரோதமான முறையிலேயே வளர்த்து வந்துள்ளதாகவும், மேலும் இந்த சிறுவனை விற்பனை செய்ய திட்டமிட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த சிறுவனை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, சிறுவனை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.