சிங்களவர்களை அதிகளவில் பணிக்கு அமர்த்தும் பேஸ்புக் நிறுவனம்

Report Print Murali Murali in சமூகம்

பேஸ்புக் நிறுவனம், சிங்கள மொழி தெரிந்தவர்களை அதிகளவில் பணியில் அமர்த்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையில் பேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களை சிங்கள மொழியை கற்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது,

“கடந்த மார்ச் மாதம் கண்டி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தை தொடர்ந்து நாட்டில் அவசரகால சட்டம் அமுல் படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த வன்முறை மேலும் தீவிரமடைய பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடங்களே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே சமூக ஊடகங்களும் முடக்கப்பட்டிருந்தது.

சிங்கள மொழியில் சமூக விரோதிகள் பதிவிட்ட விரும்பத்தகாத மற்றும் எரிசலூட்டும் சிங்கள மொழி வார்த்தைகளை அடையாளம் கண்டு நீக்கவில்லை என ஒரு வார காலத்திற்கு பேஸ்புக்கை முடக்கி அரசாங்கம் உத்தரவிட்டது.

வன்முறையில் இருந்து இலங்கை சுமூக நிலைக்கு திரும்பிய பின்னர் பேஸ்புக் நிறுவனம் நடந்த தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டது.

இந்நிலையில், தற்போது பேஸ்புக் நிறுவனம், சிங்கள மொழி தெரிந்தவர்களை அதிகளவில் பணியில் அமர்த்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.