மட்டக்களப்பில் நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம்

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுவரும் தண்ணீர் போத்தல் தொழிற்சாலையினை அகற்ற கோரி நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.

குறித்த பகுதியில் அமைக்கப்பட்டுவரும் தண்ணீர் போத்தல் தொழிற்சாலையைஅகற்றுமாறு கோரும் வகையிலான ஆர்ப்பாட்டமொன்று நாளை காலை மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக நடத்தப்படவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புகளின் ஒன்றியம், செங்கலடி-பதுளை வீதியில் உள்ள பொது அமைப்புகள் இணைந்து இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக மாவட்ட சிவில் அமைப்புகளின் ஒன்றிய தலைவர் எஸ்.சிவயோகநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று மட்டக்களப்பு அரச சார்பற்ற ஒன்றியமான இணையத்தின் காரியாலயத்தில் விசேட செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இதன்போது, குடிநீர் போத்தல் தயாரிக்கும் நிலையம் அமைக்கப்படுமானால் இந்த பகுதியில் பாரிய வறட்சி நிலையேற்படும் எனவும் விவசாயம் பாதிக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், இதில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புகளின் ஒன்றிய தலைவர் எஸ்.சிவயோகநாதன், ஏறாவூர்ப்பற்று பிரதேசசபை உறுப்பினர் எஸ்.சிவானந்தன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டுள்ளனர்.