வவுனியா சாஸ்திரிகூழாங்குளம் சிவன்கோவில் வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வரலாற்று சிறப்பு மிக்க வவுனியா சாஸ்திரிகூழாங்குளம் சிவபுர சுந்தரேஸ்வரி சமேத சந்தரேஸ்வர தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

10 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் திருவிழா 20ம் திகதி தீர்த்த திருவிழாவுடன் நிறைவு பெறும்.

இந்த ஆலயத்தின் மூலவிக்கிரகமான சிவலிங்கபெருமான் வன்னிக்காட்டில் இருந்து 1968ம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்டு இந்த வருடத்துடன் 50 வருடங்களை பூர்த்தி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

சோழர் காலத்தில் வழிபட்ட லிங்கமாக இருக்கலாமென கருதப்படும் இந்த சிவலிங்கம் பாலமோட்டை மடத்தவிளாங்குளம் பகுதியில் காட்டில் கைவிடப்பட்ட நிலையில் மக்களால் கண்டெடுக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த நிலை கோவில் குஞ்சுக்குளத்தில் வைத்து பூசை வழிபாடுகள் செய்யப்பட்ட நிலையில் மக்களுக்கு ஏற்பட்ட நோய்கள் காரணமாக மீண்டும் காட்டுப்பகுதியில் கைவிடப்பட்டதாகவும் அதன் பின்னரே சாஸ்திரி கூழாங்குளம் மக்களால் 1968ம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்டதாகவும் ஆலயத்தின் தலவரலாறு தெரிவிக்கின்றன.