இலங்கையின் வட, கிழக்கு சிறுவர்களைத் தேடிச்சென்ற பிரான்ஸ் பல்கலை மாணவர்கள்: உலகில் இப்படியொரு மனித நேயமா?

Report Print Dias Dias in சமூகம்

பிரான்ஸ் பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள் தற்போது இலங்கையின் வடக்கு, கிழக்கு ஆகிய பகுதிகளுக்கு பயணம் செய்து அங்கு பல மனிதநேயப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

IOSF (Institut D optique sans frontieres) என்ற மனித நேய அமைப்பை உருவாக்கி சேவைகளை முன்னெடுத்து வரும் குறித்த மாணவர்களின் குழுவில் இலங்கையைச் சேர்ந்த Don Jayamanne என்ற சிங்கள மாணவர் ஒருவரும் Birunthan Sivasiri என்ற தமிழ் மாணவர் ஒருவரும் உள்ளடங்குகின்றனர்.

போரின் வடுக்களிலிருந்து மீண்டுவரும் இளம் சமுதாயத்தினருக்கு குறிப்பாக தாய், தந்தையை இழந்த சிறுவர்களை சந்தித்து அவர்களோடு இணைந்து அவர்களின் முகங்களில் உண்மையான மகிழ்ச்சியுடன் கூடிய புன்முறுவலை வரவழைத்து எதிர்காலம் குறித்த ஓர் நம்பிக்கையை உருவாக்குவதை அடிப்படை நோக்காக கொண்டு குறித்த மாணவர்கள் செயற்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கிளிநொச்சி(மகாதேவா சிறுவர் இல்லம்), முல்லைத்தீவு(இனிய வாழ்வு இல்லம்), வவுனியா மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் இவர்களின் மனித நேய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து மேற்கொண்ட பல்வேறு செயற்திட்டகள் ஊடாகவும் அங்கீகரிக்கப்பட்ட இணையத்தள நிதி சேகரிப்புத் தளத்தின் ஊடாக நன்கொடையாளர்களிடமிருந்தும் மாணவர்களுக்கு கல்விச் சேவையை வழங்கிவரும் EASY STUDIES,IZY SCHOOL ஆகிய நிறுவனங்களிடம் இருந்து இந்த திட்டத்திற்கான நிதியை சேகரித்திருந்தனர்.

அத்துடன், இதற்கான பிரயாணச்சீட்டு, தங்குமிட வசதி, உணவு உள்ளிட்ட பல தனிப்பட்ட செலவுகளை தாமே பொறுப்பேற்றுக்கொண்டு இந்த செயற்றிட்டத்தில் குறித்த மாணவர்கள் பணியாற்றி வருகின்றார்கள்.

மேலும், இந்த செயற்றிட்டத்தில், Hortense Allegre (President), Rachel Locquet (VicePresident), Ambre Asr (Secretary), Toan Nguyen (Treasurer), Cyril Malinet, JoévanZiebel, Julien Bernard, Mali Toirahc, Nicolas Fouque, Sarah Cyprien, Thaddée Delebarre, Noé Nicolas, Flora Latriglia, Benefice Maelle, Jérôme A. Don Jayamanne, BirunthanSivasiri ஆகிய மாணவர்கள் பங்கெடுத்துள்ளனர்.

இத்தகைய மனித நேயச் செயற்பாடு இளம் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டிருப்பது இளம்ட சந்ததியினருக்கு ஓர் முன்னுதாரணமாக அமைவதுடன், பெற்றோகர்களுக்கு பிள்ளைகளை வழிநடத்த வேண்டிய இன்னுமொரு முக்கிய பக்கத்தை உணர்த்துவதாக அமைகின்றது.

மேலும், இந்த மனித நேய செயற்பாடு என்பது ஒரு நல்லிணக்க முயற்சியாகவும் பார்க்கப்படுகின்றது, வடக்கு, கிழக்கில் உள்ள யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் சிறுவர்கள் மீது சிங்கள மாணவர்கள் கரிசனை காட்டுவதென்பது வரவேற்கத்தக்கது.