கொள்வனவு செய்யப்பட்ட மண்ணை நேரில் சென்று பார்வையிட்டுள்ள மன்னார் நீதவான்

Report Print Ashik in சமூகம்

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட மண்னை கொள்வனவு செய்த 4 வீடுகளின் உரிமையாளர்கள், தாம் கொள்வனவு செய்ததிலும் மனித எலும்புகள் காணப்படலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதனால் குறித்த விடயத்தை கிராம அலுவலகர் ஊடாக மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்ட மண்ணை கடந்த மார்ச் மாதம் 27ஆம் திகதி மன்னார் எமில் நகர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கொள்வனவு செய்திருந்தார்.

இதன்போது அவர் கொள்வனவு செய்த மண்ணில் சந்தேகத்திற்கிடமான மனித எச்சங்கள் காணப்பட்டதாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

அவருடைய முறைப்பாட்டை தொடர்ந்து மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு இந்த விடயம் கொண்டு செல்லப்பட்ட நிலையில் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா நேரடியாக சென்று அதனை பார்வையிட்டிருந்தார்.

குறித்த மண்ணில் இருந்து மனித எலும்புகள் மீட்கப்பட்டதையடுத்து மன்னார் நீதவான் முன்னிலையில் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது தொடர்ச்சியாக மனித எலும்புகள் மீட்கப்பட்டு வந்தன.

மேலும், மன்னார் பொது மாயனத்தின் பின் பகுதியிலிருந்த மண் தொகுதியானது மன்னார் பிரதேசத்தில் உள்ள சில மக்களிடம் விற்பனை செய்யப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து குறித்த வளாகத்திலும் அதே போன்று அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து மண்ணை கொள்வனவு செய்த மக்கள் உடனடியாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்யுமாறு விசேட சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ மக்களிடம் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார்.

குறித்த வேண்டுகோளுக்கு அமைவாக விற்பனை செய்யப்பட்ட மண்ணை பெற்றுக் கொண்ட நான்கு பேர் தமது கிராம அலுவலகர் ஊடாக வழங்கிய முறைபாட்டை தொடர்ந்து மண்ணை நேற்றைய தினம் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.