பிரதீப் மாஸ்டரிடம் குறுக்கு விசாரணை! சரமாரியாக கேள்வியெழுப்பிய அரச சட்டத்தரணி

Report Print Murali Murali in சமூகம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பான வழக்கு விசாரணையின் மற்றுமொரு கட்டம் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.எம். இஸர்டீன் முன்னிலையில் இன்று நடைபெற்றது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பிரதீப் மாஸ்டரிடம் இன்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

அரச சிரேஷ்ட சட்டத்தரணி மாதவ தென்னக்கோன் பிரதிவாதியிடம் விசாரணைகளை நடத்தினார். புலனாய்வுத் துறையினரின் அச்சுறுத்தலுக்கு அமைய தாம் வாக்குமூலம் வழங்கியதாக பிரதிவாதிகளால் ஏற்கனவே மன்றுக்கு அறிவிக்கப்பட்டது.

எனினும், பல தடவைகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது ஏன் இந்த விடயத்தை குறிப்பிடவில்லை என அரச தரப்பு சட்டத்தரணி பிரதிவாதியிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

இது தொடர்பில் கடிதம் மூலம் ஏற்கனவே நீதிபதிக்கு அறிவித்துள்ளதாக சந்தேகநபர் குறிப்பிட்டார்.

எனினும், இந்த வழக்கிலிருந்து தப்பிக் கொள்வதற்கு பிரதிவாதிகளால் வடிவமைக்கப்பட்ட நாடகமே குறித்த கடிதம் என அரச தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

2014ம் ஆண்டு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், 2015ம் ஆண்டு குற்றவாளிகளாக குற்றஞ்சாட்டப்பட்ட பின்னர் ஏன் காலம் தாழ்த்தி கடிதத்தை எழுதினர் எனவும் சட்டத்தரணி கேள்வி எழுப்பியுள்ளார்.

திகதி குறிப்பிடப்படாத குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் பொய் எனவும் சட்டத்தரணி கூறியுள்ளார். பிரதிவாதிகளால் நீதிபதிக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் கடிதம் இன்று மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

கடிதம் பொய் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் சிறைச்சாலையிலுள்ள அனைத்து ஆவணங்களும் இன்று மன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, 2014 முதல் 2018 வரையிலான சிறைச்சாலைகள் பதிவுப் புத்தகங்களும் இன்று மன்றில் சமர்ப்பிக்கப்பட்டன.

பிரதிவாதிகளால் அனுப்பப்பட்ட கடிதத்தில் ஒன்றுக்கு பின் முரணான விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய சாட்சி விசாரணைக்கு மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர், மாவட்ட நீதிமன்ற பதிவாளர், மற்றுமொரு சாட்சியாளரும் அழைக்கப்பட்டிருந்தனர்.

எனினும், குறித்த மூவரிடமும் சாட்சி பதிவுகளை மேற்கொள்வதற்கு நேரம் போதாமையால் எதிர்வரும் ஜூலை மாதம் 18 ஆம் திகதி வரை விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.