கிழக்கு பல்கலை மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு - நாவற்குடா பகுதியல் உள்ள வீடொன்றில் இருந்து நேற்று மாலை தூக்கில் தொங்கிய நிலையில் கிழக்கு பல்கலைக்கழக மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாவற்குடா கிழக்கு, 4 குறுக்கு வீதி விவேகானந்தபுரம் பகுதியில் உள்ள வீட்டில் வாடகைக்கு இருந்த, கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடி விபுலானந்தா இசைநடன கல்லூரியில் கல்வி பயிலும் மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த மாணவி வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காக்காச்சிவட்டை மண்டூர் பாடசாலை வீதியை சேர்ந்த 22 வயதுடைய சங்கரத்துரை பானுஜா எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு கல்லடி விபுலானந்தா இசைநடன கல்லூரியில் கட்புலன் திறன் நுட்ப துறையில் இரண்டாம் வருட மாணவியாக கல்வி பயின்று வருகின்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரது மரணம் தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வருவதோடு, பிரேத பரிசோதனைக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.