புலிகளுக்கு நிதி சேகரிப்பு! சுவிஸ் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Report Print Dias Dias in சமூகம்

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு நிதி சேகரித்ததாக தெரிவித்து குற்றம் சுமத்தப்பட்ட வழக்கில் பெலின்சோனாவில் அமைந்துள்ள சுவிஸர்லாந்து நடுவன் அரசின் குற்றவியல் நீதிமன்றம் தீர்பளித்தது.

குறித்த வழக்கு இன்று விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, குற்றம் சுமத்தப்பட்ட அனைவரும் குற்றவியல் அமைப்பு, கட்டாய நிதி சேகரிப்பு, மிரட்டிப் பணம் பறிப்பு எனும் குற்றங்களில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

விடுதலைப்புலிகளின் நால்வர் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றங்களும் தள்ளுபடி செய்யப்பட்டு, வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் பணிப்பு வழங்கியது.

ஏனைய மூன்று முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கும் வங்கி மோசடி தொடர்பில் அறிந்திருந்து உதவியதற்காக தண்டனைப் பணம் செலுத்தவும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்படும் தடுப்பும் வழங்கப்பட்டது.

அரச தரப்பு சட்டத்தரணி நோத்தோ இலங்கையிலும், சுவிஸிலும் விடுதலைப்புலிகள் ஒரு குற்றவியல் அமைப்பு என்பதற்கு தேடி அளித்த சான்றுகளை நீதிமன்றம் நிராகரித்தது.

சுவிஸ் நடுவன் அரசின் குற்றவியல் நீதிமன்றம் இலங்கையிலும் அதற்கு அப்பால் எந்த நாட்டிலும் விடுதலைப் புலிகள் அமைப்பு எவ்வேளையிலும் குற்றவியல் அமைப்பாக செயற்பட்டதற்கோ அல்லது குற்றவியல் செயலை ஊக்குவித்தற்கோ எவ்வித சான்றுகளும் இல்லை எனத் தெளிவாக தெரிவித்தது.

முன்னதாக சுவிஸர்லாந்து சமஷ்டி குற்றவியல் நீதிமன்றம் தமிழீழ விடுதலைப் புலிகளின் 13 ஆதரவாளர்களுக்கு எதிரான வழக்கின் விசாரணைகளை இன்று ஆரம்பித்துள்ளது.

குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு 18 மாதங்கள் மற்றும் ஆறரை ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என சமஷ்டி சட்டமா அதிபர் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.

சுவிஸர்லாந்தில் கடந்த 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி அளித்தமை சம்பந்தமாக 12 தமிழர்கள் மற்றும் ஜேர்மன் இனத்தவர் ஒருவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றவியலுடன் தொடர்புடைய அமைப்புக்கு உதவியமை, மோசடி, போலியான ஆவணங்களை தயாரித்தமை, பணச்சலவை மற்றும் கப்பம் பெற்றமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் இவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

எட்டு வாரங்கள் நடைபெற்ற வழக்கு விசாரணைகளில் சமஷ்டி சட்டமா அதிபர் அலுவலகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சு என்பன உலக தமிழர் ஒருங்கிணைப்பு குழு, சந்தேக நபர்கள் மற்றும் அவர்களின் செயற்பாடுகள் தொடர்பிலான இரண்டு வாதங்களை முன்வைத்தன.

சுவிஸர்லாந்தில் உலக தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிக்கப்பட்டுள்ளது எனவும் சட்டமா அதிபர் அலுவலகம் கூறியுள்ளது.

எனினும் சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் சமஷ்டி சட்டமா அதிபர் அலுவலகம் மீதே குற்றம் சுமத்தியுள்ளனர். இந்த நடவடிக்கையானது ஐரோப்பிய ஒன்றியத்தின் தேவைக்கு அமைய செயற்படுத்தப்படும் அரசியல் நடவடிக்கை எனவும் அவர்கள் விபரித்துள்ளனர்.

குற்றவியல் வழக்கு விசாரணைகளில் நடந்த அநீதியான குற்றச்சாட்டுக்கள் மற்றும் சட்டமா அதிபர் அலுவலகத்தின் சட்டத்தரணிகளின் பல்வேறு முறைகேடுகள் சம்பந்தமாகவும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முறைப்பாடு செய்தனர்.

சட்டமா அதிபர் அலுவலகம் விடுதலைப் புலிகள் அமைப்பை அல் கைதா அமைப்பை போன்றது என சித்தரிக்க முயற்சித்துள்ளனர். விடுதலைப் புலிகளின் குற்றச் செயல்களை சட்டமா அதிபர் அலுவலகம் படங்களை கொண்டு காட்டியுள்ளது.

அத்துடன் அந்த புகைப்படங்களில் உலக தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதானி இயந்திர துப்பாக்கி மற்றும் சிறார் போராளிகளுடன் இருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது.

இதன் மூலம் உலக தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினர் விடுதலைப் புலிகளையும் அவர்கள் செயற்பாடுகளை ஆதரிப்பதாக சித்தரிக்க சட்டமா அதிபர் அலுவலகத்தின் சட்டத்தரணி முயற்சித்துள்ளார்.

இந்த நிலையில், பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் விடுதலைப் புலிகளின் போராட்டத்தின் சட்டரீதியான நிலைமையை சுட்டிக்காட்டியுள்ளனர்.

புலிகளின் கோரிக்கைக்கு அமைய மனிதாபிமான நடவடிக்கைகளுக்காகவே உலக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு சுவிஸர்லாந்தில் தமிழ் மக்களிடம் நிதி சேகரித்தது. பணத்தை மக்கள் தமது சுயவிருப்பத்தின் பேரிலேயே வழங்கினர்.

இலங்கையில் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என சுவிஸர்லாந்தில் உள்ள புலம்பெயர் தமிழ் மக்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது என சட்டமா அதிபர் அலுவலக சட்டத்தரணி முன்வைத்த குற்றச்சாட்டை பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் நிராகரித்துள்ளனர்.

விடுதலைப் புலிகள் கடந்த 1983ம் ஆண்டு முதல் கடந்த 2009ம் ஆண்டு வரை இலங்கையின் வடக்கு கிழக்கில் உள்ள மக்களுக்கு சுதந்திரம் கோரி போராடி வந்தனர். இதனால் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர் என்று பல்வேறு தளத்திலும் தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்தி - ஸ்டீபன்