சிறுமிகள் மீது பாலியல் சேட்டை: யாழில் சந்தேகத்தில் ஆசிரியர் கைது

Report Print Rakesh in சமூகம்

தனியார் கல்வி நிலையத்துக்கு சென்ற பதின்ம வயதுச் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை வழங்கிய குற்றச்சாட்டில் யாழ். வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 41 வயதான ஆசிரியர் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்.

வட்டுக்கோட்டையிலுள்ள பிரபல பாடசாலைக்கு முன்பாகவுள்ள தனியார் கல்வி நிலையத்தில் கற்பிக்கும் ஆசிரியர், அவரிடம் கற்கச் செல்லும் பதின்ம வயது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கின்றார் என்று சங்கானைப் பிரதேச செயலகத்துக்கு அநாமதேய முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைவாக பிரதேச செயலகத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆசிரியர் கற்பிக்கும் பாடசாலையில் ஆரம்பத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த ஆசிரியர் பாடசாலை மாணவிகளை தனியார் கல்வி நிலையத்துக்கு ஆங்கிலமொழி மூலமான வகுப்புக்கு அழைத்துள்ளமையும், அவர்களிடம் பாலியல் ரீதியான தொல்லை வழங்கியுள்ளமையும் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவிகள், அவர்களது பெற்றோர்கள் தகவலை வெளிப்படுத்தத் தயங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனை வெளியில் தெரியப்படுத்தினால் பெற்றோரைக் கொலைசெய்துவிடுவேன் என்று ஆசிரியர் மிரட்டியமையும், பாதிக்கப்பட்ட தரப்புகள் தயங்கியமைக்கு காரணம் என்று பொலிஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.

இருப்பினும், ஒருசில மாணவிகள் வழங்கிய வாக்குமூலத்துக்கமைவாக ஆசிரியர் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.