வியாழேந்திரன் எம்பியை சந்தித்து முறையிட்ட வேலையற்ற பட்டதாரிகள்

Report Print Kumar in சமூகம்

வேலையற்ற பட்டதாரிகளின் நியமனங்களை வழங்குவதற்கு அரசாங்கத்திற்குரிய அழுத்தங்களை தமிழ் தலைமைகள் வழங்க வேண்டும் என மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பட்டதாரிகளை அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக உள்ளீர்ப்பதற்கான நேர்முக தேர்வுகள் நடைபெற்று நியமனங்கள் வழங்கப்படவிருந்த நிலையில் நியமனங்கள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

இதனையடுத்து மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனை அவரது அலுவலகத்தில் வைத்து நேற்று சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போது எதிர்வரும் 04ஆம் திகதி நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய குறித்த நியமனங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இங்கு பட்டதாரிகள் சுட்டிக்காட்டினர்.

ஐந்தாயிரம் பட்டதாரிகள் போட்டி பரீட்சைகளின் அடிப்படையில் உள்ளீர்க்கப்படவுள்ளதாகவும் அவற்றில் 914 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில் அதிகமானவர்கள் இங்கு தெரிவு செய்யப்படுவதனால் அந்த நியமனங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் பட்டதாரிகள் சுட்டிக்காட்டினர்.

வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்குமாறு தமிழ் பேசும் பட்டதாரிகளே தொடர்ச்சியான கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை நடாத்தியுள்ள நிலையில் இன்று எமக்கு அதிக நியமனங்கள் கிடைக்கப்போகின்றது என்பதற்காக நியமனங்கள் இடைநிறுத்தப்படுவது கவலைக்குரியது எனவும் வேலையற்ற பட்டதாரிகள் இங்கு தெரிவித்தனர்.

எவ்வாறெனினும் வேலையற்ற பட்டதாரிகளின் புள்ளிகளின் அடிப்படையில் நியமனங்களை வழங்க வேண்டும் என்பதற்கான அழுத்தங்களை தாம் மேற்கொள்வோம் எனவும் இங்கு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

பட்டதாரிகளின் ஒவ்வொரு கஸ்டத்தினையும் நன்கு உணர்ந்தவன் என்ற அடிப்படையிலும் அவர்களின் நியாயமான போராட்டத்திற்கு அனைத்து விதமான ஆதரவினையும் வழங்குவதாகவும் தெரிவித்தார்.