நகைக் கடையில் கைகலப்பு: முகாமையாளர் வைத்தியசாலையில்

Report Print Rusath in சமூகம்

காத்தான்குடி பொலிஸ் பிரிவு கடற்கரை வீதியில் அமைந்துள்ள நகைக் கடை ஒன்றினுள் கைகலப்பு ஏற்பட்டதில் அதன் முகாமையாளர் தாக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சனிக்கிழமை நகை விற்பதற்தாக நகைக் கடைக்கு இருவர் வந்துள்ளனர்.

அவர்களிடம் நகைக்கான பற்றுச்சீட்டு இல்லாததன் காரணமாக ஏற்பட்ட பிரச்சினை தாக்குதல் சம்பவமாக மாறியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

இதன்போதே மேற்படி நகைக்கடை முகாமையாளர் தாக்கப்பட்டு காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நகைக் கடை முகாமையாளர் தெரிவிக்கையில்,

சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் தான் மாத்திரம் கடையில் இருந்ததாகவும் அதேசமயம் நகை விற்பதற்காக வந்தவர்களின் பேச்சு மற்றும் அவர்களின் நடவடிக்கையில் தனக்கு சந்தேகம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் அந்த இருவரில் ஒருவர் தூஷிக்கும் வார்த்தைகளினால் தன்னைத் திட்டியதாகவும் கடைக் கண்ணாடி ஒன்றை உடைத்து தன்னைத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றதாக தெரிவித்தார்.

119 பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததன் பேரில் பொலிஸார் வரவழைக்கப்பட்டதோடு மேலதிக விசாரணைகளிலும் ஈடுபட்டனர்.