மருத்துவமனையிலிருந்த சந்தேக நபர்கள் சிறைச்சாலைக்கு மாற்றம்

Report Print Aasim in சமூகம்

மாத்தறை நகைக்கடை கொள்ளை முயற்சியின் சந்தேக நபர்கள் மருத்துவமனையிலிருந்து சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மாத்தறை நகரில் நேற்று முன்தினம் கொள்ளைக்கும்பல் ஒன்று ஆயுதமுனையில் நகைக்கடை ஒன்றைக் கொள்ளையடிக்க முயன்ற போது பொலிசாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் கடும் துப்பாக்கிச் சமர் நடைபெற்றிருந்தது.

இதன்போது பொலிசார் மூன்று ​பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தார்.

கொள்ளையர்களும் நால்வர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் பிரதான சந்தேக நபர் பொலிசாரினால் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் தொடர்ந்தும் காலி கராப்பிட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொஸ்கொட தாரக எனப்படும் தர்மகீர்த்தி தாரக மற்றும் அதுல கித்சிறி ஆகியோரே இன்று மருத்துவமனையிலிருந்து சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இன்று காலை இவர்கள் இருவரும் உடல் நலம் தேறிய நிலையில் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புடன் சந்தேக நபர்களைப் பொறுப்பேற்ற சிறைச்சாலை அதிகாரிகள் சந்தேக நபர்களை அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

எனினும் கொஸ்கொட தாரகவின் சகோதரர் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவர்கள் மூவரும் காலி நீதிமன்ற உத்தரவின் பேரில் எதிர்வரும் இரண்டாம் திகதி வரை விளக்கமறியல் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளனர்.