பொலிசார் மீது குண்டுத்தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்தவர் கைது

Report Print Aasim in சமூகம்

பொலிசார் மீது கைக்குண்டுத்தாக்குதல் மேற்கொள்ள முயன்ற சந்தேக நபர் ஒருவரை மதுகம பொலிசார் இன்று கைது செய்துள்ளனர்.

ஒன்றரை லட்சம் ரூபா கப்பம் தருமாறு மதுகம நகருக்கு அருகேயுள்ள நவுத்துடுவ பிரதேச வர்த்தகர் ஒருவருக்கு நேற்று முழுநாளும் தொலைபேசி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.

அவ்வாறு கப்பம் கொடுக்காது போனால் அவரையும் குடும்பத்தினரையும் படுகொலை செய்யப்போவதாகவும் எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பாக வர்த்தகர் மதுகம பொலிசில் மேற்கொண்ட முறைப்பாட்டை அடுத்து பொலிசாரின் ஆலோசனையின் செயற்பட்ட வர்த்தகரினால் பிரகாரம் கப்பத் தொகை ஐம்பதினாயிரமாக குறைத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

ஐம்பதினாயிரம் ரூபாவை கப்பமாகப் பெற்றுக் கொள்ள கப்பம் கோரியவர் இணக்கம் தெரிவித்த பின்னர் குறித்த பணத்தொகையை மதுகம தொடங்கொட அதிவேகப் பாதை நுழைவாயில் அருகே சிக்னல் கம்பம் அருகே வைத்துவிட்டுச் செல்லுமாறு வர்த்தகரை அறிவுறுத்தியிருந்தார்.

இதனையடுத்து பணத்தை எடுத்துக் கொள்வதற்காக வருகை தந்த சந்தேக நபரை பொலிசார் சுற்றி வளைத்தபோது அவர் பொலிசாரை நோக்கி கைக்குண்டுத் தாக்குதல் ஒன்றை நடத்த முயற்சித்துள்ளார். எனினும் சாமர்த்தியமாக செயற்பட்ட பொலிசார் சந்தேக நபரை மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் வேறுபல குற்றச் செயல்களுக்கு தேடப்பட்டு வந்த ஒருவர் என்றும் நாளைய தினம் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவுள்ளதாகவும் பொலிசார் தொடர்ந்தும் தெரிவித்துள்ளனர்.