யாழ்.பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களுக்கு கத்திக்குத்து

Report Print Tamilini in சமூகம்

யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட முரண்பாட்டில் இருவர் கத்திக் குத்துக்கு இலக்காகியுள்ளனர் என்று தெரியவருகின்றது. முகாமைத்துவ வணிக பீட இறுதி வருட சிங்கள மாணவர்களுக்கு இடையிலேயே கத்திக்குத்து நடந்துள்ளது. காயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் நடந்துள்ளது. ஜயசூர்ய (வயது 26), சண்றுவான் (வயது – 26) ஆகியோரே காயங்களுக்குள் உள்ளாகியுள்ளனர். ஒருவருக்கு தலையிலும் மற்றையவருக்கு முதுகிலும் கத்திக் குத்து காயம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

நீண்டநாள்களாகவே யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீட இறுதி சிங்கள மாணவர்கள் இரண்டு தரப்புகளாகச் செயற்படுகின்றனர். இன்று ஒரு தரப்பினர் இன்று விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த இடத்துக்கு வந்த மற்றய தரப்பினர் பகிடிவதை தொடர்பில் பேச ஆரம்பிக்க இரண்டு தரப்புகளுக்கு இடையேயும் கைகலப்பு ஏற்பட்டது.

அதில் மாணவர் ஒருவர் கத்தி எடுத்து இருவரைக் குத்தினார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. கைகலப்பில் சில மாணவர்கள் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.