இந்த நாட்டினை ஆளுமையுள்ள தலைவர்கள் ஆட்சி செய்யவில்லை: சிறிநேசன் எம்.பி

Report Print Kumar in சமூகம்

ஆளுமையுள்ள தலைவர்கள் இந்த நாட்டினை ஆட்சி செய்திருந்தால் தமிழரசுக்கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற இனரீதியான கட்சிகள் தோன்றியிருக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தம் மீதான மக்கள் கலந்துரையாடல் மற்றும் மட்டக்களப்பிலுள்ள பொது அமைப்புகள், சிவில் அமைப்புகள், சமூக செயற்பாட்டாளர்களை அறிவுறுத்தும் நிகழ்வு நேற்று காலை முதல் மாலை வரை மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் உள்ள சர்வோதயம் நிலையத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

இந்த நாட்டில் பல்லின மக்களை ஆளக்கூடிய, அந்த மக்களின் குறைபாடுகளை சிந்தித்து சமத்துவமான முறையில் சிந்தித்து அரசியல் செய்யக்கூடிய தலைவர்கள் இந்த நாட்டில் இருந்தார்களா, இருக்கின்றார்களா, இருப்பார்களா என்ற கேள்வி எங்களுக்குள் இருக்கின்றது.

கடந்த காலத்தில் இருந்த சிங்கள அரச தலைவர்களின் அரசியல் ஆளுமைகளை பார்க்கின்றபோது பெரும்பான்மையின மக்களின் வாக்குகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும், பெரும்பான்மை மக்களின் திருப்தியோடு அரசியலை செய்து முடித்துவிடலாம் என்ற எண்ணமே அவர்களுக்கு இருந்து வந்தது.

சந்திரிகா அம்மையாரும், மைத்திரிபால சிறிசேனவும் சிறுபான்மை மக்களின் பலத்த எதிர்பார்ப்புடனும், ஆதரவுடனும் ஆட்சிக்கு வந்தவர்கள்.

அவர்களுக்கு ஒன்றரை வருடங்களே அரசியல் யாப்பு பற்றியும், தாங்கள் பல்லின மக்களினால் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்ற எண்ணங்கள் இருக்கின்றன.

பின்னர் அந்த எண்ணங்கள் காலாவதியாகி விடுகின்றன. அதன்பின்னர் பெரும்பான்மையினத்தின் வாக்கு வங்கிக்கு சார்பாக செயற்படும் நிலையே இருந்து வருகின்றது.

அண்மையில் ஞானசார தேரர் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டபோது நாங்கள் என்ன நடக்கின்றது என்று பார்த்துக் கொண்டிருந்தோம். நாங்கள் எதிர்பார்த்ததுதான் நடந்தது.

சட்ட ஆட்சி இந்த நாட்டில் நடக்கின்றதா, சட்டத்தின் முன்பாக அனைவரும் சமமாக நோக்கப்படுகின்றார்களா என்ற கேள்வி எங்களுக்குள் எழுந்துள்ளது.

இந்த நாட்டில் ஆட்சிய செய்த தலைவர்கள் பல்லின மக்களை ஆளுகின்ற ஆளுமையில்லாத தலைவர்களே இந்த நாட்டில் இருந்துள்ளனர்.ஆளுமையுள்ள தலைவர்கள் இந்த நாட்டில் இருந்திருந்தால் இனரீதியான கட்சிகள் இந்த நாட்டில் தோன்றியிருக்காது. தமிழரசுக்கட்சி, முஸ்லிம் காங்கிரஸ், ஹெலஉறுமய போன்ற கட்சிகள் தோன்றியிருக்காது.

ஐக்கிய தேசிய கட்சியோ ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியோ ஒரு ஒழுங்கான தேசிய கட்சியாக இருந்திருந்தால் அந்த கட்சிகளில் அனைவரும் உறுப்புரிமையினை பெற்றிருப்போம். அனைவரும் தேசிய கட்சியுடன் இணைந்து செயற்படுவோம்.

ஆனால் தேசிய கட்சிகள் என்று சொல்லும் இந்த கட்சிகள் பெரும்பான்மையின மக்களின் வாக்கு வங்கிகளை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் செயற்பட்டதன் காரணமாகவே இந்த நாட்டில் துரதிர்ஸ்டவசமாக இனரீதியான கட்சிகள் தோற்றம் பெற்றன என குறிப்பிட்டுள்ளார்.