சொகுசு காரில் கொள்ளையடிக்க சென்றவர்களுக்கு நேர்ந்த கதி: வவுனியாவில் சம்பவம்

Report Print Thileepan Thileepan in சமூகம்
1105Shares

வவுனியாவில் சொகுசு கார் மற்றும் போலி கைத்துப்பாக்கியுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் மூவரும் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா, வாரிக்குட்டியூர் கிராமத்தில் தனவந்தரொருவரின் வீட்டிற்குள் நுழைந்த மூவர் கைதுப்பாக்கியை காட்டி கொள்ளையடிக்க முயற்சித்ததாக பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் கடந்த புதன்கிழமை முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது வவுனியா பொலிஸார் நேற்று மூன்று சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

இதன்போது அவர்கள் கொள்ளையடிக்க பயன்படுத்தியதாக கூறப்படும் சொகுசு கார் ஒன்றையும், போலி கைத்துப்பாக்கி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த தனவந்தரின் வீட்டில் கொள்ளையடிக்க சென்றவர்கள் சொகுசு காரில் சென்று கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளனர்.

எனினும் வீட்டு உரிமையாளர் கதவை திறக்காத காரணத்தால் கொள்ளை முயற்சியை கைவிட்டு மூவரும் தப்பித்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ராஜகிரிய, வெல்லம்பிட்டிய மற்றும் மன்னார் பிரதேசங்களை சேர்ந்த 27, 30, 37 வயதுடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை கைப்பற்றப்பட்ட கைத்துப்பாக்கி போலியானது என்பதுடன், இவர்கள் மூவரும் பல குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின் சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளனர்.