வாகரை கட்டுமுறிவு வனாந்தரப் பகுதியில் தேன் எடுக்கச் சென்றவர் காட்டு யானையால் தாக்கப்பட்டு ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாக வாகரைப் பொலிஸார் தெரிவித்தார்.
இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் கட்டுமுறிவு பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தை வேலன் நவரெட்ணம் (வயது 29) என்பவரே கொல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
தற்போது காட்டுத் தேன் சேகரிக்கும் காலமானதால் இவர் காலை வேளையில் தேன் எடுக்கும் நோக்கத்துடன் கட்டுமுறிவுக் குளம் வனப் பகுதிக்குச் சென்றுள்ளார்.
அங்கு மறைந்திருந்த காட்டு யானை இவரை எதிர்கொண்டு மூர்க்கமாகத் தாக்கியுள்ளது. சம்பவத்தில் அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பொழுது புலர்ந்ததும் காட்டு யானைக் கூட்டம் அவ்விடத்திலிருந்து நகர்ந்தவுடனேயே உதவிக்கு விரைந்தோர் தாக்குதலுக்குள்ளானவரை நெருங்க முடிந்திருக்கிறது என்று கட்டு முறிவு விவசாய அமைப்பின் செயலாளர் ரீ.ஜீ. குருகுலசிங்கம் தெரிவித்தார்.
சடலம் உடற்கூறாய்வுக்காக வாகரை பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம்பற்றி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.