திராய்மடு பாடசாலையில் அடையாளம் தெரியாத நபர்களின் மோசமான செயற்பாடு!

Report Print Kumar in சமூகம்
107Shares

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட திராய்மடு தமிழ் வித்தியாலயத்தின் சொத்துகள் அடையாளம் தெரியாத நபர்களினால் சேதமாக்கப்படுவதையும், விரும்பத்தகாத செயல்களை மேற்கொள்வதை கண்டித்தும் பொதுமக்கள் இன்று காலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட திராய்மடு தமிழ் வித்தியாலயத்திற்குள் நேற்று மாலை அத்துமீறிச்சென்றுள்ள அடையாளம் தெரியாத நபர்கள், மாணவர்களின் புத்தகங்கள் மற்றும் ஆசிரியர்களின் இருக்கைகள், ஆவணங்களை எரியூட்டியுள்ளதுடன் மேசைகளில் மலம் கழித்தும் சென்றுள்ளனர்.

பின்தங்கிய பாடசாலையான இப்பாடசாலையில் ஆரம்ப பிரிவு மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை சிறப்பாக அமைக்கப்பட்ட பதாகைகள் மற்றும் செயற்பாட்டு பொருட்களும் நாசமாக்கப்பட்டுள்ளன.

கடந்த ஒரு மாதத்தில் மூன்றாவது முறையாக இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

மிகவும் பின்தங்கிய பகுதியாக காணப்படும் இப்பகுதியில் மாணவர்களை பல்வேறு சிரமங்களின் மத்தியில் கற்பித்தில் செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் நிலையில் இவ்வாறான சம்வம் காரணமாக பாடசாலைக்கு மாணவர்களை அனுப்புவதில் அச்சநிலை ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தமக்கு வசதியில்லாத காரணத்தினால் தமது பிள்ளைகளை நகர்ப்புற பாடசாலைகளுக்கு அனுப்ப முடியாமல் இவ்வாறான பாடசாலைகளில் அனுமதிப்பதாகவும் ஆனால் இவ்வாறான செயற்பாடுகள் தமது பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பில் கவலையடையச்செய்வதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேநேரம் சம்பவ இடத்திற்கு வந்த மட்டக்களப்பு தலைமைய பொலிஸ் பொறுப்பதிகாரி திஹகவத்துற, மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பிரிவுபொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் ஆகியோர் மோப்பநாய்கள் சகிதம் விசாரணைகளை மேற்கொண்டனர்.

அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வியாழேந்திரன், ஞா.சிறிநேசன் ஆகியோரும் வருகைதந்து பாடசாலை அதிபர் மற்றும் பெற்றோருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.

மாணவர்களின் பாதுகாப்பினை கருத்தில்கொண்டு குறித்த பாடசாலைக்கு இரவு நேர காவலாளி ஒருவரை நியமிப்பதற்கு தேவையான நடவடிக்கையினை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் இதன் போது தெரிவித்துள்ளார்.