வெளிநாடுகளில் இருந்து வரும் பணமே யாழில் சிறுவர்களின் மரணங்களுக்கு முக்கிய காரணம்

Report Print Ashik in சமூகம்

வெளிநாடுகளில் இருந்து வரும் தேவைக்கு அதிகமான பணமே யாழில் கலச்சார சீர்கேடுகளும், சிறுவர்களின் மரணங்களும் நிகழ முக்கிய காரணம் என வட மாகாணசபை உறுப்பினர் பா.டெனிஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியை சேர்ந்த றெஜினாவின் படுகொலையை கண்டித்தும், நாடு முழுதும் இடம்பெறும் பெண்கள் மற்றும் சிறுவர் மீதான வன்கொடுமைகளை கண்டித்தும் இன்று மன்னாரில் பேரணியொன்று இடம்பெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

யுத்தத்திற்கு முன்னர் எமது முன்னைய தலைவர்கள் இருந்த பொழுது எவ்வாறு எங்களுடைய சிறார்கள் மற்றும் பெண்கள் நடத்தப்பட்டார்கள், அவர்களுக்கு இருந்த பாதுகாப்பு எவ்வளவு என்பதை அனைவரும் அறிவோம்.

ஆனால் அந்த பாதுகாப்பு இன்று இல்லை. தற்போதைய கால கட்டத்தில் யாழ்ப்பாணத்தில் கலாச்சார சீர்கேடுகளும், எங்களுடைய சிறுவர்களின் மரணமும் நிகழ்வதற்கு முக்கிய காரணம் வெளிநாடுகளில் உள்ள எங்களுடைய உறவுகள், தங்களுடைய சகோதரம் மற்றும் உறவுகளுக்கு தேவைக்கு அதிகமாக பணம் அனுப்புகின்றமையே என குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் சமூக மட்ட அமைப்புக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று காலை முருங்கன் வைத்தியசாலைக்கு முன் குறித்த பேரணி ஆரம்பமானது.

இந்த பேரணியில் அருட்தந்தையர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பாடசாலை மாணவர்கள், பொது அமைப்புக்கள், அப்பிரதேச வர்த்தகர்கள், பெண்கள் அமைப்புக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பேரணி பிரதான வீதியூடாக சென்று முருங்கன் பேருந்து தரிப்பிடத்தை அடைந்த நிலையில், கோரிக்கை அடங்கய மகஜரொன்று உரிய தரப்பினருக்கு கையளிக்கும் வகையில் வட மாகாணசபை உறுப்பினர் பா.டெனிஸ்வரனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.