பல்கலைக்கழக மாணவர்கள் மொட்டையடிப்பு - முறைப்பாடுகள் இல்லை

Report Print Theesan in சமூகம்

வவுனியா யாழ் வளாகத்தின் இரண்டாம் வருட விஞ்ஞான பீட மாணவர்களால் கடந்த மாதம் 21ஆம் திகதி கனிஸ்ட மாணவர்களுக்கு மொட்டையடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவர்களிடமிருந்து முறைப்பாடுகள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை என வவுனியா யாழ் வளாகத்தின் முதல்வர் ரி.மங்களேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா, பூங்கா வீதியில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

குறித்த சம்பவம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கோரிக்கையை ஏற்று விரிவான விசாரணை ஒன்றையும் ஆரம்பித்துள்ளோம்.

பகிடிவதை குறித்து ஊடகங்களில் வெளிவரும் செய்திகளால் பல்கலைக்கழகத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தியது. பகிடிவதைகுறித்து வளாகத்தில் கல்வி கற்றுவரும் மாணவர்களோ அல்லது அவர்களின் பெற்றோர்களோ முறைப்பாடுகள் எதனையும் மேற்கொண்டிருக்கவில்லை.

இதேவேளை, பகிடிவதை குறித்து தகவல்கள் கிடைக்கப்பெற்று விசாரணைகள் மேற்கொள்ளப்படும்போது மாணவர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பதில்லை அதன் காரணமாக பகிடிவதை சட்டங்கள் இருந்தும் விசாரணைகளை மேற்கொண்டு அவர்களுக்கு தண்டனை வழங்குவதில் சிக்கல்கள் ஏற்படுகிறது.

மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதால் பிரயோக விஞ்ஞான பீட அவையின் தீர்மானத்தின் பிரகாரம் மாணவர்கள் உள்வாங்கப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.