உடல் முழுவதும் காயங்களுடன் வாழ்வதற்கே போராடும் இத்தனை பேரை உங்களுக்கு தெரியுமா?

Report Print Dias Dias in சமூகம்

நீண்ட காலமாக இடம்பெற்ற போரில் பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் உயிரிழை பராமரிப்பு இல்லம் புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் ஏனையவர்களிடம் உதவி கோரியுள்ளது.

இது தொடர்பில் உயிரிழை அமைப்பின் செயலாளர் எஸ்.இருதயராஜா வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில் மேலும்,

போரின் காரணமாக ஏராளமான மக்கள் மாற்றுத்திறனாளிகளாக்கப்பட்டனர். அவர்களில் மிக முக்கியமாக முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோர் அதிகம். போரின் பின்பு இவர்கள் போதுமான பராமரிப்பு வசதிகள் அற்றும், கவனிப்பார் யாரும் இல்லாமலும் இறப்புக்களை எதிர்கொண்டிருந்தனர்.

இவற்றை கவனத்தில் கொண்டு நாம் எம்மையே பாதுகாத்து பராமரித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணக்கருவோடு 2010ஆம் ஆண்டு ஒரு சில பயனாளிகளைக் கொண்டு வவுனியா சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் பதிவினை மேற்கொண்டு ஆரம்பிக்கப்பட்டது உயிரிழை பராமரிப்பு இல்லம்.

இதன்பின் இல்லத்திற்கென மாங்குளத்தில் ஏ9 வீதியில் இடமொன்று பெற்றுக்கொள்ளப்பட்ட போதும் அதற்குள் அலுவலகமின்றி இருந்தபோது இதனை அறிந்த பிரம்டன் தமிழ் ஒன்றியம் கனடா எனும் அமைப்பினர் முன்வந்து 2016இல் அலுவலகத்தினை அமைத்து கொடுத்தது.

அடுத்த படியாக பராமரிப்பு இல்லத்தினை அமைப்பதற்கு நீண்ட நாட்களாக எடுக்கப்பட்ட முயற்சிபின் பலனாக ஐ.பி.சி தமிழ் ஊடக நிறுவனமொன்று முன்வந்ததின் வழியாக 2018ஆம் ஆண்டு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

தற்போது பத்துப்பேர் இந்த பராமரிப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள போதும் இங்கே தங்கியிருப்பவர்களுக்கான மருத்துவம், பராமரிப்பு மற்றும் உணவு போன்ற மிக முக்கிய தேவைகளை நிறைவேற்றுவதில் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியதாயுள்ளது.

எனவே இதற்கான உதவியை எமது புலம்பெயர் உறவுகளிடமிருந்து நாம் எதிர்பார்ப்பதாக உயிரிழை பாரமரிப்பு இல்லம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் தமிழ் நலனில் அக்கறையுள்ள தமிழ் உறவுகள் அனைவரும் குறித்த பணியை திறம்பட செய்வதற்கு ஒத்துழைப்பை நல்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

மேலும் இந்த பணியில் தம்மையும் இணைத்து பங்களிப்பு செய்ய விரும்புபவர்கள் உயிரிழை அமைப்பின் தலைவர் கோ.ஸ்ரீகரன் - (0770824140 - 0772412549) அல்லது செயலாளர் இருதயராஜா - (0775579155) ஆகியோரை தொடர்பு கொள்ள முடியும் என செயலாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் உதவ விரும்புவர்களுக்காக,
கணக்கின் பெயர்:- உயிரிழை பராமரிப்பு நிலையம்
கணக்கு இலக்கம்:- 82726777
வங்கி:- இலங்கை வங்கி
கிளை:- மாங்குளம் என்ற வங்கி கணக்கிலக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.