கிருஷ்ணாவின் படுகொலை தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட பரபரப்பு தகவல்

Report Print Murali Murali in சமூகம்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கிருஷ்ணா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் போதைப்பொருள் வியாபாரம் தொடர்பிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.

நவோதய மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான எஸ்.கே. கிருஷ்ணா சுட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த சம்பவம் இன்று காலை 7.20 மணிக்கு இடம்பெற்றிருந்தது. இது குறித்த கருத்து தெரிவித்துள்ள பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“கடந்த 24 மணி நேரத்திற்குள் கொழும்பில் இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இதில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் நவோதயா கிருஷ்ணா படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

உயிரிழந்துள்ள கொழும்பு மாநகர சபை உறுப்பினர் நவோதயா கிருஷ்ணாவுக்கு எதிராக கஞ்சா போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் இரண்டு வழக்குகள் காணப்படுகின்றன.

குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள அவர், பிணையில் இருக்கும் போதே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் வியாபாரத்தை மையப்படுத்தியே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில், குறித்த படுகொலை சம்பவம் தொடர்பில் இருவேறு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக” பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.