காட்டு யானைகளின் தொல்லையினால் அச்சத்தில் உறங்கும் கிராமவாசிகள்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - ரொட்டவெவ பகுதியில் காட்டு யானைகளின் தொல்லையினால் இரவு நேரங்களில் அச்சத்தில் உறங்குவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில், அரச அதிகாரிகளுக்கு பல தடவைகள் தெரியப்படுத்தியும் இதுவரை எதுவித நடவடிக்கைகளும் எடுக்க வில்லை என்று கிராம மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

ரொட்டவெவ கிராமத்தில் ஒவ்வொரு நாளும் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்து கொண்டு வருவதாகவும் இரவில் வீட்டிற்கு வெளியில் கூட வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

அத்துடன் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் இரவு நேரங்களில் வகுப்புகளுக்காக செல்வதை நிறுத்தியுள்ளதாகவும், மார்க்க கல்வியை கற்கும் மக்தப் மற்றும் ஹிப்ழ் மத்ரஷா மாணவர்கள் அதிகாலை நேரங்களில் இடம் பெறுகின்ற மார்க்க வகுப்புகளுக்கு கூட செல்ல முடியாத நிலை தோன்றியுள்ளதாகவும் மாணவர்களின் பெற்றோர்கள் குறிப்பிடுகின்றனர்.

காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் மா, பிலா மற்றும் வாழை மரங்கள் அதிகளவில் சேதமாகி வருவதாகவும் மக்களுக்கு ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்னர் காட்டு யானைகளின் தொல்லைகளிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ரொட்டவெவ கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதேவேளை, திருகோணமலை - கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கண்டல் காட்டுப் பகுதியில் உள்ள குடியிருப்பு காணிக்குள் புகுந்த காட்டு யானை குடிசை வீடு ஒன்றை நாசமாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கண்டல்காடு பகுதியில் உள்ள குடிசையை காட்டு யானை சேதப்படுத்தி உள்ளதால் தங்களுக்கு மனவேதனை அளிப்பதாகவும் வாழ்வாதாரங்களை துவம்சம் செய்துள்ளதாகவும் குடிசை உரிமையாளர் கம்துன் அலாப்தீன் தெரிவித்தார்.

இரவு நேரங்களில் நிம்மதியாக தூங்க முடியாது, விவசாய நிலங்களை பாதுகாப்பது கடினம் எனவும், இந்த காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், உயிரிழப்பு ஏற்படும் முன் தங்களது உயிர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.