அவசர சிகிச்சை பிரிவில் குழந்தை அனுமதி - வைத்தியசாலையில் போதையில் தள்ளாடிய இளம் தாய்

Report Print Vethu Vethu in சமூகம்

ஆறு மாத குழந்தை அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்திருந்த நிலையில், வைத்தியசாலையின் கழிப்பறையில் இளம் தாய் ஒருவர் போதையில் தள்ளாடியுள்ளார்.

பொரலஸ்கமுவ பிரதேசத்தை சேர்ந்த 27 வயதான பெண்ணின் 6 மாத குழந்தை நிமோனியா நோயினால் பாதிக்கப்பட்டமையினால் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அங்கிருந்து கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளார். அங்கு குழந்தை ஆபத்தான நிலையில் இருந்தமையினால் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் குழந்தையின் தாயார் வைத்தியசாலையின் மேல் மாடியில் உள்ள தாய்மார்களுக்கான அறையில் தங்கியிருந்துள்ளார்.

இந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருந்தமையினால் குழந்தை, தாயுடன் வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

இதேவேளை, குழந்தை அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதன் போது இந்த பெண்ணின் செயற்பாடு வைத்தியசாலையில் இருந்த ஏனைய தாய்மார்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டிருந்த நிலையில் வைத்தியசாலையின் கழிப்பறையில் ஹெரோயின் அருந்தும் போது அவர் சிக்கியுள்ள நிலையில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய வைத்தியசாலை பொலிஸாரினால் அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். காலி தலைமை பொலிஸார் ஊடாக பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

பின்னர் குற்றவாளியாகிய பெண்ணை கடுமையான எச்சரித்த நீதிபதி 5000 ரூபாய் அபராதம் விதித்து விடுவித்துள்ளார்.