நிலத்தடி நீரை உறிஞ்சும் தொழிற்சாலைக்கு எதிராக மீண்டும் போராட்டம்

Report Print Kumar in சமூகம்
56Shares

மட்டக்களப்பு - புல்லுமலையில் அமைக்கப்பட்டு வரும் குடிநீர் போத்தல் தயாரிப்பு நிலையத்தினை மூட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி கித்துள் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கித்துள் பொதுச் சந்தைக்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம், சாரதா மகளிர் அமைப்பு, நகோமி பெண்கள் அமைப்பு என்பன இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

இதில் புல்லுமலை நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் புல்லுமலை தொழிற்சாலைக்கு எதிரான இயற்கை வளங்களை அழிக்காதே, நிலத்தடி நீரை உறிஞ்சி விற்காதே, குடிப்பதற்கு தண்ணீர் இல்லை விற்பதற்கு அனுமதி வழங்கியது யார்? போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த தண்ணீர் போத்தல் தொழிற்சாலையினை தடுத்து நிறுத்துமாறு பல்வேறு போராட்டங்களை நடத்திய போதிலும் இதுவரையில் குறித்த தொழிற்சாலையினை மூடுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லையென போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் த.தே.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், ஏறாவூர்ப்பற்று பிரதேசசபை உறுப்பினர் எஸ்.சிவானந்தன் உட்பட பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

சுற்றாடல் துறைக்கு ஜனாதிபதி பொறுப்பாக உள்ள நிலையில் ஜனாதிபதி இதில் தலையிட்டு இந்த தொழிற்சாலையினை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கையினை எடுக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கோரிக்கை விடுத்தார்.