ஆறு வருடங்களுக்கு முன் தந்தையை கொலை செய்த நபருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்னர் தனது தந்தையை கொலை செய்த நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி வரை சந்தேகநபரை விசாரணைக்காக தடுத்து வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இன்று உத்தரவிட்டார்.

கருக்காமுனை, ஈச்சிலம்பற்று பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய ஒருவரே தந்தையை கொலை செய்த குற்றத்துக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தனது தந்தையை கடந்த ஆறு வருடங்களுக்கு முன்னர் மஹிந்தபுர, கொல்லம் குளம் பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்ததாக குறித்த சந்தேக நபருக்கெதிராக பொலிஸாரினால் வழக்கு தொடரப்பட்டது.

குறித்த வழக்கு திருகோணமலை உயர்நீதிமன்றில் நடைபெற்று வரும் நிலையில் விசாரணைக்காக வேண்டி சந்தேகநபரை சேருநுவர பொலிஸார் கைது செய்து இன்று மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.