தமிழுக்காக நாம் தமிழராய் நாம் வேலைத்திட்டம் ஆரம்பம்

Report Print Kumar in சமூகம்

தமிழ் மொழியை முதன்மைப் படுத்தி அதனை கிழக்கு மாகாணம் பூராகவும் நடைமுறைப்படுத்தும் வகையில் "தமிழுக்காக நாம் தமிழராய் நாம்" என்ற வேலைத்திட்டம் நேற்று திங்கட்கிழமை மாலை ஆரம்பித்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனின் ஏற்பாட்டில் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசனின் பங்களிப்புடன் இந்த திட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் மட்டக்களப்ப மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தேசிய ஒருமைப்பாடு,நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெட்னம் மற்றும் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் பாஸ்கரா மற்றும் பிரதேசசபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், பொது அமைப்புகள், வர்த்தக சங்க பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது "தமிழுக்காக நாம் தமிழராய் நாம்" என்னும் திட்டத்தின் அவசியம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் விளக்கமளித்தார்.

இவ்வாறான நல்ல திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தமது அமைச்சு தயாராகவிருப்பதாக இங்கு அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.

“தமிழுக்காக நாம் தமிழராய் நாம்” செயற்றிட்டத்தில், பகுதி நேர தமிழ்ப் பள்ளிகளை நிறுவுதல்,பொதுக் கட்டடங்களுக்கு தமிழ்ப் பெயர்களைச் சூட்டுதல், வியாபார நிலைய விளம்பரப் பலகைகளில் தமிழ் மொழியை முதன்மைப்படுத்தல், தமிழ்ப் பெரியார்களின் உருவச் சிலைகளை நிறுவுதல், தினமும் பாடசாலைகளை தமிழ்மொழி வாழ்த்துடன் ஆரம்பித்தல், தமிழர்களின் கலை, இலக்கிய, பண்பாட்டு அம்சங்களை அழிந்துவிடாமல் பாதுகாத்தல், கிழக்கில் அனைத்து அரச, தனியார் துறைகளில் அரசகரும மொழியான தமிழை முதன் மொழியாகப் பயன்படுத்தல் போன்றவை இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஏறாவூர்ப்பற்று பிரதேசத்தில் எதிர்நோக்கப்படும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் மக்களுடன் கலந்துரையாடல்களையும் அமைச்சர் மேற்கொண்டார்.