30ஆவது நாளாக தொடரும் மனித எச்சங்கள் அகழ்வு பணி

Report Print Ashik in சமூகம்

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் அகழ்வு பணிகள் 30ஆவது நாளாகவும் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அகழ்வு பணி மன்னார் நீதவான் ரி.ஜே.பிராபாகரனின் மேற்பார்வையில், விசேட சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையில் அவருடன் இணைந்து களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா மற்றும் அவரின் குழுவினரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

காலை 7.30 மணிக்கு ஆரம்பமான பணிகள் மாலை 6 மணியளவில் நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில் இன்று 30ஆவது தடவையாக இடம்பெற்று வருகின்ற அகழ்வு பணிகளின் போது இது வரை 23 மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் இன்னமும் 37 மனித எச்சங்கள் அடையாள படுத்தப்பட்டுள்ளதாகவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பான சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த புதைகுழியில் சுமார் (3 ½) அடி நீளம் உள்ள ஒரு மனித எச்சமும் மீட்கப்படுள்ளதுடன், குறித்த மனித எச்சம் தொடர்பாக அடையாளப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், எப்போது நிறைவடையும் எனக்கூற முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.