நாம் ஒற்றுமையோடு மக்களோடு மக்களாகப் பயணிக்க வேண்டும்!

Report Print V.T.Sahadevarajah in சமூகம்
66Shares

இரு இனங்களும் வாழ்கின்ற எமது பிரதேசத்தில் நாம் இன, மத, பேதம் பார்க்காமல் ஒற்றுமையாக மக்களோடு மக்களாக பயணிக்க வேண்டும் என காரைதீவு பிரதேசசபை தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காரைதீவு பிரதேசசபையின் 5ஆவது மாதாந்த அமர்வு இன்று சபா மண்டபத்தில் நடைபெற்றுள்ளது இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

எமது சபை வருமானம் குறைந்த சபை. எனவே சபைக்கு வருமானம் ஈட்டக்கூடிய செயற்றிட்டங்களை நாம் கொணரவேண்டும்.

சபையால் நிறைவேற்றமுடியாத இனங்களிடையே குரோதங்களை அல்லது பிரிவினையை வளர்க்கக்கூடிய பிரேரணைகளை கொண்டுவருவருவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும்.

பல அமைச்சுகளிலிருந்து நீங்கள் ஓடிஆடி ஒதுக்கீடுகளைக் கொண்டுவருகின்றபோது நானும் எமது சட்டதிட்டங்களுக்கமைவாக பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகின்றேன்.

விழிப்புத்தான் விடுதலையின் முதற்படி என்பார்கள். எனவே இப்பிரதேசத்தில் நடக்கின்ற அத்தனைவிடயத்திலும் நாம் கவனமாகவிருக்கவேண்டும்.

உபதவிசாளர் கூறியதற்கமைவாக காரைதீவுப்பிரதேசத்தினுள் எமது அனுமதியில்லாமல் உணவுப்பொருட்களை விற்க அனுமதிக்கப்படமாட்டாது.

சபையினால் வரிகூட்ட நிர்ணயிக்கப்பட்ட அத்தனை விடயங்களுக்கும் சபை ஏகமனதாக தீர்மானித்தமையை முன்னிட்டு அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி கூறுகின்றேன்.

சபைக்கென மாடறுக்கும் மடுவம் தேவையென நீங்கள் கோரினால் அதனைச் செய்து கொடுக்கத் தயராகவுள்ளேன். எந்த திட்டமானாலும், தீர்மானாலும் உங்கள் ஆதரவோடு பகிரங்கமாகத்தான் மேற்கொண்டு வருகின்றேன். எனது விருப்பத்திற்கு எதையும் நான் செய்யவில்லை.

ஒவ்வொரு வட்டாரத்திற்கும் உபகுழுக்களை அமைக்குமாறு இந்தச்சபையிலும் தங்களை வேண்டுகின்றேன். நாம் மக்களோடு மக்களாக பயணிக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைகள் தொடர்பில் உறுப்பினர்களிடையே வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.