வவுனியா - காத்தார் சின்னக்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சூரிய கலனில் இருந்து பெற்றுக்கொள்ளப்படும் மின்சாரத்தினால் அப்பகுதியில் அதிகளவு வெப்ப நிலை காணப்படுகின்றது.
இதன் காரணமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் நோய்வாய்ப்படுவதாகவும், எனவே இதிலிருந்து தமது கிராமத்தை மீட்டுத்தருமாறும், காத்தார்சின்னக்குளம் பகுதியிலிருந்து சூரியக்கலம் நிறுவனத்தை அகற்றுமாறும் அப்பகுதி கிராம மக்கள் கோரியுள்ளார்கள்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா காத்தார்சின்னக்குளம் பகுதியில் 5 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள சூரியகலம் (சோளர்) மூலம் இலங்கை மின்சார சபையினருக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது.
இதன் காரணமாக தமது இருப்பிடங்களுக்கு குறிப்பாக அப்பகுதி கிராமத்திலுள்ளவர்களுக்கு இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாகவும் சூரியக்கலம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் வெப்ப நிலை அதிகரித்து காணப்படுகின்றது. சூழல் பிரச்சினைகள், சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நோய்வாய்ப்படுகின்றார்கள்.
வெப்பம் அதிகரித்து அப்பகுதி முழுவதும் வெப்ப நிலை காணப்படுகின்றது. இதனால் அப்பகுதியிலுள்ள வீடுகளில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத்தடுத்து நிறுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இன்று காலை அப்பகுதியில் ஒன்றிணைந்த கிராம மக்கள் கோரியுள்ளார்கள்.
குறித்த சூரியக்கலம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் பாதுகாப்பு காவலாளி தமது கடமைகளை மேற்கொள்வதாக தெரிவித்து எமது வீடுகளில் நடைபெறும் அன்றாட செயற்பாடுகள், நடவடிக்கைகளை அவதானித்துவருவதாகவும், பெண்கள் குறிப்பாக பாடசாலை செல்லும் மாணவிகள் கிணற்றில் குளிப்பதைக்கூட குறித்த காவலாளி அவதானித்து வருவதாகவும் இந்த நடவடிக்கையினை தடுத்து நிறுத்துவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
இது குறித்த முறைப்பாடு ஒன்றினை வவுனியா பிரதேச செயலாளரிடமும் அரசாங்க அதிபரிடமும் முறையிடவுள்ளதாக காத்தார்சின்னக்குளம் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.