யாழ். நாவற்குழி விவகாரம்! யாழ். மேல் நீதிமன்றால் விவாதத்துக்கு திகதியிடப்பட்டது

Report Print Sumi in சமூகம்
112Shares

யாழ்ப்பாணம் - நாவற்குழி பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விவாதம் எதிர்வரும் ஒக்டோபர் 15ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆட்கொணர்வு மனுக்கள் மூன்றும் காலம் தாழ்த்தியவை எனவும் அவற்றை ஆரம்ப விசாரணையிலேயே மேல் நீதிமன்றம் தள்ளுபடி செய்யவேண்டும் என்ற சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆட்சேபனைக்கு தமது எழுத்து மூல ஆட்சேபனையை மனுதாரர்கள் சார்பில் இன்று முன்வைக்கப்பட்ட நிலையிலேயே மேல் நீதிமன்றால் விவாதத்துக்கு திகதியிடப்பட்டது.

1996ஆம் ஆண்டு நாவற்குழி படைமுகாமில் இராணுவ அதிகாரியாக இருந்த துமிந்த கெப்பிட்டிவெலான தலைமையிலான படையினர் கைது செய்து கொண்டு சென்ற 24 இளைஞர்கள் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டனர்.

தமது உறவினர்களை மீட்டுத் தருமாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்கள் சட்டத்தரணிகள் கு.குருபரன் மற்றும் எஸ்.சுபாசினி ஆகியோர் ஊடாக யாழ். மேல் நீதிமன்றில் ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்தனர்.

கடந்த நவம்பர் 9ஆம் திகதி 12 பேர் சார்பில் தனித்தனியே ஆள்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் 3 மனுக்களை மட்டும் மேல் நீதிமன்று ஏற்றுக்கொண்டது.

9 பேரின் மனுக்கள் 2002ஆம் ஆண்டு யாழ்.மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் யாழ்ப்பாணத்தில் நடத்த கூடாது என அப்போதைய யாழ்.மாவட்ட இராணுவ தளபதி கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றில் 2003ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவை அடுத்து, இந்த வழக்குகள் அக்கால பகுதியில் அனுராதபுர மேல் நீதிமன்றுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

வேறொரு மேல் நீதிமன்றில் நிலுவையில் இருக்கும் வழக்கொன்றை இன்னொரு மேல் நீதிமன்றில் மீள திறக்க முடியாது என்று சுட்டிக்காட்டியே, 9 பேரின் ஆட்கொணர்வு மனுக்கள் யாழ். மேல் நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்டன.

மனுக்களில் 1ஆம் பிரதிவாதியாக மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவெலான 2ம் பிரதிவாதியாக இலங்கை இராணுவ தளபதி மற்றும் 3ம் பிரதிவாதியாக சட்ட மா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

சட்ட மா அதிபர் திணைக்கள பிரதி மன்றாடியார் அதிபதி செய்த்திய குணசேகர மேல் நீதிமன்றில் தோன்றினார். அவர்களுடன் அரச சட்டவாதிகள் நாகரட்ணம் நிஷாந்த்தும் முன்னிலையாகினர்.

மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணிகள் கே.குருபரன், வி.திருக்குமரன், ஆகியோர் முன்னிலையாகினர். எதிர் மனுதாரரான மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவெலான சார்பில் சட்டமா அதிபர்

திணைக்களத்தால் முன்வைக்கப்பட்ட ஆரம்ப விசாரணையின் ஆட்சேபனைக்கு எதிராக மனுதாரர்களால் இன்று எழுத்துமூல ஆட்சேபனை முன்வைக்கப்பட்டது.

“ஆள்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்வதற்கு 1996ஆம் ஆண்டிலிருந்து 2015ஆம் ஆண்டுவரை நாட்டில் நிலவிய பாதுகாப்பற்ற சூழல் அனைவருக்கும் தெரியும். 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஓரளவு சூழல் மாறியிருக்கின்றது என்ற அடிப்படையில் நீதிமன்றுக்கு வந்தால் எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல் தமக்கு நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மனுதாரர்கள் இந்த நீதிமன்றுக்கு வந்துள்ளனர்.

நீதிமன்றை காலம் தாழ்த்தி நாடியமைக்கான காரணம் பாதுகாப்பு அச்சுறுத்தல்களேயாகும். ஆனால் அதுகூட இன்றைய சூழ்நிலையில் மனுதாரர்களுக்கு பாதுகாப்பு இருக்கின்றதா? என்ற கேள்வி உள்ளது.

குறிப்பாக கடந்த தவணையின் போது, நீதிமன்ற வளாகத்திலே பல்வேறு புலனாய்வு அதிகாரிகள் நடமாடினர். அதற்கு முன்னதாக இந்த மனுதாரர்களின் ஒருவரின் வீட்டுக்குச் சென்ற புலனாய்வாளர்கள், தங்களை தொண்டு நிறுவனப் பணியாளர்கள் என அடையாளப்படுத்தி மனுதாரருக்கு முறையற்ற விதத்தில் அழுத்தம் கொடுத்தனர்” என்று மன்றுரைத்தேன் என மனுதாரர்களின் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் தெரிவித்தார்.

“நீதிமன்ற வளாகத்துக்குள் சென்ற தவணையின் போது வந்திருந்த அலுவலகர்கள் என்னுடைய பாதுகாப்புக்காக வந்தனர்” என்று பிரதி மன்றாடியார் அதிபதி பதலளித்தார்.

“2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லையா? என்ற கேள்வியை நான் பதிலுக்கு எழுப்பினேன். அத்துடன், தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்தே ற வழக்குகள் பலவற்றை அநுராதபுரம் மேல் நீதிமன்றுக்கு இவர்கள் மாற்றினார்கள்” என்று மன்றுரைத்தேன் என்றும் மனுதாரர்களின் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் தெரிவித்தார்.

“தற்பாதுகாப்புக்கு என பிரதி மன்றாடியார் அதிபதி குறிப்பிட்டதால் நீதிமன்று அதில் தலையிட முடியாது. ஆனால் மனுதாரரால் எழுத்துமூலம் குறிப்பிடப்பட்டது. போன்று புலனாய்வாளர்களால் மனுதாரருக்கு அச்சுறுத்தல் இருப்பின் எதிர்மனுதாரர்களின் சட்டத்தரணிகள் அதற்குப் பொறுப்புக்கூறவேண்டும்” என்று மேல் நீதிமன்ற நீதிபதி சுட்டிக்காட்டினார் என்று மனுதாரர்களின் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் தெரிவித்தார்.