நுவரெலியாவில் போனி குதிரைகளின் அட்டகாசம்! நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

Report Print Gokulan Gokulan in சமூகம்

நுவரெலியா பிரதேசசபைக்கு உட்பட்ட மீப்பிலிமான பிரதேசத்தில் நுவரெலியா மாநகரசபை எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் பராமரித்து வரும் போனி குதிரைகளினால் விவசாயிகள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, குறித்த விடயம் தொடர்பில் நுவரெலியா பிரதேசசபை உறுப்பினர்கள் நடவடிக்கைகளில் எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நுவரெலியா மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் பராமரிக்கப்படும் போனி குதிரைகள் நுவரெலியா பிரதேசப்பகுதியில் அட்டகாசம் செய்து வருகின்றது.

எனவே, இது குறித்து நுவரெலியா மாநகர சபை அபராதம் விதிக்க வேண்டும் என நுவரெலியா பிரதேசசபையின் மீப்பிலிமான வட்டார உறுப்பினர்கள் இருவர் நுவரெலியா பிரதேசசபையின் தவிசாளரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

நுவரெலியா பிரதேசசபையின் மாதாந்த கூட்டம் கந்தப்பளை நகர் சனசமூக நிலையத்தில், சபையின் தவிசாளர் வே.யோகராஜா தலைமையில் நேற்று காலையில் இடம்பெற்றது.

இதன்போது சபையில் கருத்து தெரிவித்த குறித்த இருவரும் இவ்வாறு கூறியுள்ளனர்.

“நுவரெலியா பிரதேசசபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் நாளுக்குநாள் போனி குதிரைகள், காட்டெருமைகள் என ஊடுருவி விவசாய பயிர்கள் மற்றும் விவசாய நிலையங்களை பாதிப்புக்குள்ளாக்கி வருகின்றது.

அத்துடன் பொதுமக்களுக்கும் இடையூர்களை ஏற்படுத்துகின்றது.

எனவே இந்த மிருகங்களின் அட்டகாசத்திலிருந்து மக்களையும் அவர்களின் பொருளாதாரத்தையும் பாதுகாக்க நுவரெலியா பிரதேச சபைஊடாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது தொடர்பாக கமநல திணைக்களம் மற்றும் மிருகங்கள் பாதுகாப்பு திணைக்களத்தின் கவனத்துக்கு கொண்டுவர வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.