பேரறிவாளனை விடுவிப்பதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை! ராகுல் காந்தி கூறியதாக தகவல்

Report Print Ajith Ajith in சமூகம்
89Shares

பேரறிவாளனை விடுவிக்க தங்கள் குடும்பத்திற்கு ஆட்சேபம் இல்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கபாலி, காலா திரைப்படங்களின் இயக்குநர் பா.ரஞ்சித் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை நேற்று சந்தித்துள்ளார். டெல்லியில் உள்ள ராகுல்காந்தியின் வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது.

அப்போது நடிகர் கலையரசனும் உடன் இருந்தார். இந்த சந்திப்பின்போதே மேற்கண்ட விடயம் தெரிவிக்கப்பட்டதாக தமிழக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ராகுல் காந்தியும், பா.ரஞ்சித்தும் சுமார் 2 மணி நேரம் சினிமா, அரசியல் உள்பட பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பேரறிவாளனை விடுதலை செய்வதற்கு உதவி செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தியிடம் பா.ரஞ்சித் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதற்கு பதில் அளித்த ராகுல்காந்தி, “ராஜீவ் கொலை குற்றவாளியான பேரறிவாளனை சிறையில் இருந்து விடுதலை செய்வதில் தனக்கோ, தனது குடும்பத்தினருக்கோ எந்தவித ஆட்சேபனையும் இல்லை” என்று தெரிவித்தார்.

இதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த பா.ரஞ்சித், ராகுல்காந்திக்கு நன்றி தெரிவித்துக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரறிவாளனை விடுவிக்க ஆட்சேபனை இல்லை என்று ராகுல் தெரிவித்துள்ள கருத்து, இந்த விவகாரத்தில் புதிய திருப்பத்தையும், பரபரப்பையும் உருவாக்கி உள்ளது. ராகுல் கோரிக்கையை மத்திய அரசு ஏற்குமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

முன்னர் சோனியாகாந்தி கோரியதற்கு அமைய நளினியின் மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

அதே போன்று ராகுலின் வேண்டுகோளை ஏற்று பேரறிவாளனை விடுதலை செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.