விளக்கமாகக் கூறிய நீதிபதி - அடம்பிடித்த விக்கியின் சட்டத்தரணி

Report Print Rakesh in சமூகம்
441Shares

“மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பைப் பெற்றுக்கொள்வதற்கு நீதிமன்றுக்கு விண்ணப்பிக்கப்பட்டது” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் சட்டத்தரணி தெரிவித்தபோதும், அவர் விண்ணப்பித்தமைக்கான பதிவு எதுவும் நீதிமன்றப் பதிவேட்டில் இல்லை என்று நீதிபதி அறிவித்தார்.

வடக்கு மாகாண அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியமை சட்டமுரணானது என்று தெரிவித்து பா.டெனீஸ்வரன் முதலமைச்சருக்கு எதிராக வழக்குத் தாக்கல்செய்திருந்தார்.

இந்த வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்றம் டெனீஸ்வரன் அமைச்சராகத் தொடர்கின்றார் என்ற இடைக்கால உத்தரவை கடந்த 29ஆம் திகதி வழங்கியது.

இந்த வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்றுமுன்தினம் எடுத்துக்கொள்ளப்பட்டது. முதலமைச்சர் விக்னேஸ்வரன் சார்பில் அவரது சட்டத்தரணி லக்ஷ்மன் ஜெயக்குமார் முன்னிலையானார்.

நீதிமன்றத்தின் உத்தரவு தமக்குக் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார்.

“நீதிமன்றம் உத்தரவுகளை அனுப்புவதில்லை. இணையதளத்தில் பார்வையிட முடியும்” என்று நீதிபதி தெரிவித்தார். “இணையதளத்தில் பார்வையிட்டோம். ஆனால், உறுதிப்படுத்திய பிரதி வேண்டும்” என்று முதலமைச்சரின் சட்டத்தரணி கோரினார்.

“உறுதிப்படுத்திய பிரதியைப் பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பித்தால் உடனே வழங்கப்படும்” என்று நீதிபதி தெரிவித்தார். “கடந்த 2ஆம் திகதி விண்ணப்பித்தபோதும் இதுவரை வழங்கப்படவில்லை” என்று முதலமைச்சரின் சட்டத்தரணி தெரிவித்தார்.

இதன்போது டெனீஸ்வரன் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, “நாங்கள் 2ஆம் திகதி விண்ணப்பித்தோம். 3ஆம் திகதி நீதிமன்ற உத்தரவு கிடைத்தது” என்றார்.

நீதிமன்றப் பதிவேடுகளை நீதிபதி ஆராய்ந்தார். டெனீஸ்வரனின் சட்டத்தரணி மாத்திரமே விண்ணப்பித்துள்ளமையை அவர் சுட்டிக்காட்டினார். முதலமைச்சரின் சட்டத்தரணி விண்ணப்பிக்கவில்லை என்றார்.

இதன்போது முதலமைச்சர் தரப்புச் சட்டத்தரணி, “இல்லை நாங்கள் விண்ணப்பித்தோம்” என்றார். ஆனால், நீதிபதி அதற்கான பதிவுகள் இல்லை என்று தெரிவித்தார்.