கொழும்பு மாநகர சபையின் சுயேச்சைக் குழு உறுப்பினரும் நவோதய மக்கள் முன்னணியின் தலைவருமான கிருஷ்ணா எனப்படும் கிருஷ்ணபிள்ளை கிருபானந்தன் (வயது - 40) சுட்டுப் படுகொலைசெய்யப்பட்டமை தொடர்பில் பொலிஸார் முக்கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்தக் கொலை அரசியல் போட்டியாலா அல்லது வர்த்தக ரீதியில் ஏற்பட்ட முரண்பாட்டாலா அல்லது தனிப்பட்ட பகைமையாலா இடம்பெற்றுள்ளது என்பதுகுறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
நவோதய மக்கள் முன்னணியின் தலைவரான கிருஷ்ணா நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை காலை 7.45 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கொழும்பு செட்டியார் தெருவில் வைத்து இவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. கொழும்பு, ஜெம்பட்டா வீதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்த நிலையில், இந்தச் சம்பவம் கொழும்பில் பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தனது பழக்கடையில் நின்றபோது மோட்டார்சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் மாநகர சபை உறுப்பினர் கிருஷ்ணா மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். படுகாயமடைந்த அவர் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி உயிழந்தார்.
இவர் கடந்த பெப்ரவரி மாதம் நடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சுயேச்சைக் குழுவில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தார்.
தமிழ் அரசியல் கைதியான ஆனந்தசுதாகரின் விடுதலைக்காகவும், அவரது பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டுக்காகவும் கிருஷ்ணா தலைமையிலான் நவோதய மக்கள் முன்னணி பல உதவிகளைச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.