கிளிநொச்சியில் லஞ்சம் வாங்கிய பொலிஸார்: கமராவில் பதிவாகிய காட்சிகள்

Report Print Suman Suman in சமூகம்
2830Shares

கிளிநொச்சிப் போக்குவரத்து பொலிஸார் இலஞ்சம் பெற்றுக்கொண்டு சட்டத்தையே மாற்றுகின்றனர் என விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

அண்மையில், கிளிநொச்சி முருகானந்தா கலூரிக்கு பாதுகாப்புக் கடமைக்காக நின்ற கிளிநொச்சி பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பொலிஸார் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி சென்ற ஒருவரை இடைமறித்துள்ளனர்.

சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி பயணித்தால் நீதிமன்றம் செல்லவேண்டும் இதற்கு கூடிய அளவு பணம் செலுத்த வேண்டும் என நீண்டநேரம் மறித்து வைத்திருந்த குறித்த பொலிஸார் உங்களுக்கு ஒரு உதவி மட்டும் செய்யலாம் ஆயிரம் ரூபாய் காசு தாருங்கள் வேறு ஒருவரின் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு சிறிய குற்றம் ஒன்றை எழுதித்தருவதாக தெரிவித்துள்ளனர்.

பின்னர் ஆயிரம் ரூபாவினைப் பெற்றுக்கொண்ட குறித்த பொலிஸார், அந்த சாரதியின் நண்பரின் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு தலைக்கவசம் இன்றிப் பயணித்தமை என்று 500 ரூபாய்க்கான போலி குற்றச்சாட்டினை எழுதி உள்ளனர் என அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், இவ்வாறு பொலிஸார் பணம் பெற்றுக்கொண்டே பாரிய குற்றச் செயல்களுக்கும் உடந்தையாக உள்ளனர் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பரந்தன் சந்தியில் இருந்து வெளிகண்டால் பாலம் வரையான பிரதான வீதியில் கடமையில் நிற்கின்ற போக்குவரத்துப் பொலிஸார் குறித்த பகுதிகளில் மட்டும் நாள் ஒன்றுக்கு பலரிடம் இருந்து இலஞ்சம் பெற்றுவருவதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாது பயணித்தவரின் நண்பரின் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு இலஞ்சம் வாங்கிக்கொண்டு தண்டம் எழுத்து காட்சி கையடக்கத் தொலைபேசிக் கமராவில் பதிவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.