பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள ஈழ அகதிகளுடன் கனடா சென்ற கப்பல்

Report Print Jeslin Jeslin in சமூகம்

ஈழ அகதிகள் 500 பேரை ஏற்றிக்கொண்டு எட்டு வருடங்களுக்கு முன்னர் கனடாவைச் சென்றடைந்த எம்.வீ.சன்சீ என்ற கப்பல் தற்போது பாரிய சுற்றாடல் பிரச்சினைகளை ஏற்படுத்தும் ஒன்றாக மாறியிருப்பதாக கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

52 மீற்றர் நீளம்கொண்ட இந்த கப்பல் 38 வருடங்கள் பழமையானது என்பதுடன், கடந்த 2010ஆம் ஆண்டு 500 ஈழ அகதிகளுடன் கனடாவிற்கு சென்றடைந்துள்ளது.

அதன்பின்னர் கனேடிய எல்லைப் பாதுகாப்பு சபையின் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட இந்த கப்பல் நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் இருந்து தற்போது சுற்றாடலுக்கும், கடற்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இரசாயனங்கள் வெளியாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த எட்டு வருடங்களாக இந்த கப்பலை நிறுத்தி வைத்து பராமரிப்பதற்கு பிராந்திய அரசாங்கம் 9 லட்சத்து 70 கனேடிய டொலர்களை செலவிட்டிருப்பதாகவும் தெரியவருகின்றது.

இந்த கப்பலை உடைப்பதற்கான ஒப்பந்தம், கப்பல் உடைக்கும் நிறுவனங்களுடன் ஏற்படுத்திக் கொண்ட போதும், கப்பலின் எஞ்சின்கள் உள்ளிட்ட அனைத்து பாகங்களையும் அந்த நிறுவனங்கள் கொண்டு செல்ல வேண்டும் என்ற நிபந்தனையால், இந்த திட்டம் கிடப்பில் இருக்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.