சர்வதேச போதைப்பொருள் மையமாக உருவெடுத்துள்ள சிறைச்சாலை

Report Print Kamel Kamel in சமூகம்

சர்வதேச போதைப்பொருள் மையமாக வெலிக்கடை சிறைச்சாலை மாறியுள்ளதாக அரசாங்க ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன், வெலிக்கடை சிறைச்சாலையை மையமாகக் கொண்டு சர்வதேச போதைப்பொருள் வர்த்தகர்களும், வேறு திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களும் செயற்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த செய்தியில் மேலும்,

அதிகாரபூர்வமற்ற தொலைபேசி பரிவர்த்தனையொன்று வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து இயங்கி வருவதுடன், மாதமொன்றுக்கு சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தொலைபேசி உரையாடல்கள் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு வெளிநாட்டு போதைப்பொருள் வர்த்தகர்கள் தங்களது தொடர்பாடல் மையமாக வெலிக்கடை சிறைச்சாலையை பயன்படுத்தி கொண்டுள்ளதாக விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி எம்.ஆர்.லத்தீப் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான், இந்தியா, பிரேஸில் போன்ற நாடுகளிலிருந்து கொள்கலன்களில் போதைப்பொருள் கடத்தல், பாரியளவில் சட்டவிரோத சிகரட்டுகளை கொண்டு வருதல், தங்கம் கடத்தல், கறுப்புப் பண விவகாரம் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் வெலிக்கடை சிறைச்சாலையின் தொலைபேசி உரையாடல்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேவேளை மரண தண்டனை உள்ளிட்ட பாரிய தண்டனைகள் விதிக்கப்பட்ட குற்றவாளிகள் வெளிநாடுகளில் உள்ள பாதாள உலகக் குழுக்களுடன் வெலிக்கடை சிறைச்சாலையின் தொலைபேசிகளின் ஊடாக தொடர்பு பேணுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் தொலைபேசி உரையாடல்களை தடுப்பதன் மூலம் போதைப் பொருள் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களை தடுக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.