கிண்ணியா வலய கல்வி அலுவலகத்தின் நிர்வாக சீர்கேடு! மாணவனுக்கு இழைக்கப்பட்ட அநீதி

Report Print M.M.Nilamdeen M.M.Nilamdeen in சமூகம்

கடந்த 2013ஆம் ஆண்டு திருகோணமலை மாவட்டம் கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்தால் நடத்தப்பட்ட பாடசாலை மட்டத்திலான எழுத்தறிவுப் போட்டியில் முதலாமிடம் பெற்ற மாணவன் என். முகம்மது நத்ஹிர் மற்றும் நான்காமிடம் பெற்ற மாணவன் எம்.ஏ. ஸஹில்.

இவர்கள் இருவரும் கிண்ணியா மத்திய கல்லூரியில் இருந்து கலந்து கொண்டு வெற்றி பெற்றார்கள்.

குறித்த போட்டி நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற இரு மாணவர்களுக்கும் மெடல் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று கிண்ணியா வலயக் கல்வி அலவலக அதிகாரிகளால் அப்போது சொல்லப்பட்டது.

இந்த நிலையில், மூன்று வருடம் கடந்த பின் 2016 ஆம் ஆண்டு 4 ஆம் இடம் பெற்ற மாணவன் எம்.ஏ.ஸஹில் என்பவருக்கு மெடல் மற்றும் சான்றிதழ் ஆகியன கிண்ணியா மத்திய கல்லூரியின் காலைக் கூட்ட (காலை ஆராதனை) நிகழ்வின் போது வழங்கப்பட்டு விட்டது.

ஆனால் முதலாமிடம் பெற்ற மாணவன் என். முகம்மது நத்ஹிர் என்பவரது மெடல் மற்றும் சான்றிதழ் ஆகியன இன்னும் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது.

இது குறித்து அப்போதைய மத்திய கல்லூரி அதிபரிடம் பலமுறை வினவிய போதும் “வலயக் கல்வி அலுவலகம் குறித்த மெடல் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை இன்னும் பாடசாலைக்கு வழங்கவில்லை” என்ற காரணம் சொல்லப்பட்டது.

கடந்த 2015 ஆம் ஆண்டு கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்தால் நடத்தப்பட்ட பாடசாலை மட்டத்திலான ஆண்டு - 5 மாணவர்களுக்கான சதுரக் கணித்தல் போட்டியிலும் இம் மாணவன் என். முகம்மது நத்ஹிர் என்பவர் கிண்ணியா மத்திய கல்லூரியில் இருந்து கலந்து கொண்டு முதலாமிடம் பெற்று வெற்றி பெற்றார். அதற்கான சான்றிதழ் மற்றும் மெடலும் இன்னும் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது.

அப்படியானால் 4 ஆம் இடம் பெற்ற மாணவன் எம்.ஏ.ஸஹில் என்பவருக்கு மெடல் மற்றும் சான்றிதழ் ஆகியன எங்கிருந்து வந்தது? எப்படி வந்தது? அப்படியானால் முதலாமிடம் பெற்றுள்ள மாணனுக்கு பாகுபாடு குரோதம் காட்டப்படுகின்றதா?

இச்சம்பவமானது இம்மாணவனின் அடிப்படை உரிமை மீறும் செயல் என்பது தெரியவில்லையா?

கடந்த 7 ஆண்டுகளாக கிண்ணியா மத்திய கல்லூரியின் மெத்தனப் போக்கினால் மாணவர்களின் திறமைகள் மழுங்கடிக்கப்படவில்லையா? மாணவர்களின் ஊக்கத் தன்மைக்கு விரோதமாகச் செயல்படும் அதிகாரிகள் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க முடியாதுள்ளது.

ஒரே போட்டியில், ஒரே பாடசாலையில், ஒரே வகுப்பில் கல்வி கற்கின்ற மாணவன் ஒருவன் போட்டியிட்டு 4 ஆம் இடம் வெற்றி பெற்ற மாணவனுக்கு மெடல் மற்றும் சான்றிதழ் ஆகியன வழங்கும் போது முதலாமிடம் வெற்றி பெற்ற மாணவனின் மனநிலை எப்படியிருக்கும் என்பதை இந்த ஆசிரிய ஜென்மங்களால் சற்று உணர முடியாமல் உள்ளது அநீதியின் உச்ச கட்டமாகும்.

இம்மாணவனுக்கு நடந்துள்ள கொடுமை பொடுபோக்குத் தனம். இனிமேல் எந்தவொரு மாணவனுக்கும் நிகழக் கூடாது என்ற நோக்கில் எழுத்து மூலமான முறைப்பாட்டை கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் பணிப்பாளர் கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகல்லாகம ஆகியோருக்கு இம்மாணவனின் தந்தையால் பதிவுத் தபால் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கிண்ணியா வலய கல்விப் பணிப்பாளர் திருமதி முனவ்வறாவிடம் இது குறித்து எழுத்து மூலமாக கடந்த மார்ச் மாதம் முறைப்பாடு செய்தும் 4 மாதங்கள் கடந்தும் இன்னும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் எவ்விதமான பதிலும் தனக்குக் கிடைக்கவில்லையென்று மாணவனின் தந்தை தெரிவித்தார்.

இங்கும் நீதி கிடைக்கவில்லை என்றால் இந்த பொடு போக்குத் தனத்தை மனித உரிமை ஆணைக் குழுவில் முறைப்பாடு செய்து இதை அரங்கேற்றப் போவதாக மாணவனின் தந்தை தெரிவித்துள்ளார்.