பெண்ணொருவர் உட்பட மூன்று இலங்கையர்கள் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

போலி கடவுச்சீட்டுகள் மூலம் இலங்கையர்களை இந்திய பிரஜைகளை போல் வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகநபர்களை தமிழக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சட்டவிரோத நடவடிக்கை தொடர்பில் 38 வயதான பெண் ஒருவர் உட்பட மூன்று இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையர்களிடம் 10 இலட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு போலி கடவுச்சீட்டுக்களை தயாரித்து வழங்கிய குற்றச்சாட்டில் பயண முகவர் உட்பட 11 பேரை தமிழக குற்றப் பிரிவு பொலிஸார் ஏற்கனவே கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள இலங்கை பெண் சுற்றுலா வீசா அனுமதியில் இந்தியாவுக்கு வந்து வீசா அனுமதிகாலம் முடிந்த பின்னரும் இந்தியாவில் தங்கியிருந்துள்ளார்.

இந்த நிலையில், அந்த பெண் போலி கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள முகவர் ஒருவரின் உதவியை பெற்றுள்ளார்.

இலங்கை கடவுச்சீட்டை கொண்டுள்ள இந்த பெண்ணின் பெயரில் போலி ஆதார் அட்டையும் எடுக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெண் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த இரண்டு பேர் சென்னையில் வீடொன்றில் தங்கியிருந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இவர்கள் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இருந்து கிடைக்கப்பெறும் தகவல்களை அடிப்படையாக கொண்டு, இலங்கையர்களுக்கு போலி இந்திய கடவுச்சீட்டுக்கள் தயாரிக்க பயண முகவர் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த முகவர், பொருளாதார ரீயில் பலவீனமானவர்களிடம் உள்ள கலாவதியான கடவுச்சீட்டுக்களை சேகரித்து அவற்றை செல்லுப்படியான கடவுச்சீட்டுகள் போன்று மாற்றியமைத்து இலங்கையர்களுக்கு விற்பனை செய்துள்ளார்.

77 இந்திய கடவுச்சீட்டுக்கள், 12 இலங்கை கடவுச்சீடுக்கள், கடவுச்சீட்டை தயாரிக்கும் இயந்திரம் மற்றும் 85 ஆயிரம் பணத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.