இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் குடும்பத்திற்கு கைகொடுத்த உறவுகள்! மீண்டுமொரு நெகிழ்ச்சி சம்பவம்

Report Print Dias Dias in சமூகம்

யாழில் நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் குடும்பத்திற்கு வீடு புனரமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

20 இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட குறித்த வீடு மெய்ப்பாதுகாவலரான சரத் ஹேமச்சந்திரவின் குடும்பத்தினரிடம் கடந்த வாரம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீட்டினை திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் நண்பர்கள், கனடா, லண்டன், அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் வாழும் யாழ். பரியோவான் கல்லூரியில் 1981ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றிய பழைய மாணவர்கள் மற்றும் சிரேஸ்ட கனிஸ்ட மாணவர்கள், வெளிநாடுகளில் வாழும் பரியோவான் கல்லூரி மாணவர்கள் அத்துடன் கனடாவிலுள்ள வேலணை வாழ் மக்கள், இளஞ்செழியனின் குடும்பத்தார் ஆகியோர் இணைந்து புனரமைத்துள்ளனர்.

இந்த நிலையில், நீதிபதி இளஞ்செழியனை காப்பாற்றி தன்னுயிரை இழந்த மெய்ப்பாதுகாவலரது குடும்பத்தினை மறக்காது அவர்களது வீட்டினை புனரமைத்து கொடுத்தமையானது நெகிழ்ச்சியாகவுள்ளது என பலரும் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த வருடம் ஜுலை 22ஆம் திகதி நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் சரத் ஹேமச்சந்திர என்ற நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார்.

17 வருடங்களாக நீதிபதி இளஞ்செழியனுக்கு மெய்ப்பாதுகாவலராக இருந்த சிலாபத்தை சேர்ந்த 51 வயதாகிய சரத் ஹேமச்சந்திரவே இதில் உயிரிழந்திருந்தார்.

இந்த சம்பவத்தையடுத்து உயிரிழந்தவரின் உறவினர்களை யாழ். போதனா வைத்தியசாலையில் வைத்து சந்தித்த நீதிபதி இளஞ்செழியன் அவர்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கோரியதுடன், கண்ணீர்விட்டு அழுதிருந்தார்.

இந்த சம்பவமானது வடக்கு, கிழக்கு மக்களை மாத்திரமல்லாது தென்னிலங்கை உள்ளிட்ட முழு நாட்டையுமே கண்ணீரில் கரைய வைத்திருந்தது.

சரத் ஹேமச்சந்திரவின் குடும்பம் மிகவும் வறுமையானது. எனவே தந்தையை இழந்த சரத் ஹேமச்சந்திரவின் இரு பிள்ளைகளையும் தனது சொந்த பிள்ளைகளைப் போல் பராமரித்து, தான் இறக்கும் வரை அவர்களது எதிர்காலத்திற்கு தேவையான சகல விடயங்களையும் ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து செய்வதாக நீதிபதி இளஞ்செழியன் உறுதியளித்தார் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியான இளஞ்செழியன்.

இவர் இனம், மதம், மொழி பேதம் பாராது செய்த இந்த கைமாறு இலங்கை மக்கள் அனைவரது மனதிலும் ஆழப்பதிந்து விட்டது. அத்துடன் உயிரிழந்த தனது மெய்ப்பாதுகாவலர் மீது நீதிபதி இளஞ்செழியன் கொண்ட அக்கறையானது நல்லிணக்கத்திற்கு முன்மாதிரியாய் அமைந்தது.

இதேவேளை இளஞ்செழியனின் இந்த மனதுருகச் செய்யும் நடவடிக்கைகள் தொடர்பில் தென்னிலங்கையின் மூத்த அரசியல்வாதிகளும் நெகிழ்ச்சியுடன் தமது கருத்துக்களை பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.