ஒரு வயதான குழந்தைக்கு பியர் கொடுத்த தந்தைக்கு ஏற்பட்டுள்ள நிலை

Report Print Murali Murali in சமூகம்

தனது ஒரு வயதான சிறு குழந்தைக்கு பியர் கொடுத்த சம்பவம் தொடர்பில் குழந்தையின் தந்தை உள்ளிட்ட நால்வரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆண் குழந்தை ஒன்றுக்கு மதுபானம் பருகக் கொடுக்கும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியிருந்தது. இந்நிலையில், சம்பவம் குறித்து தீவிர விசாரணைகள் இடம்பெற்றிருந்தன.

விசாரணைகளின் பின்னர் குறித்த சம்பவம், கணன்கமுவ, மீகாலேவ பகுதியில் இடம்பெற்றிருந்ததாகவும், இதனையடுத்து குழந்தையின் தந்தை உள்ளிட்ட நால்வரை கைது செய்திருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

40, 38, 50, 23 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். 1995ம் ஆண்டின் 22ம் இலக்க குற்றவியல் திருத்த சட்டத்தின் கீழ் சிறுவர் துஷ்பிரயோகம் (பிரிவு 308A) என்ற குற்றத்திற்காக குழந்தையின் தந்தை உட்பட சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

இந்நிலையில், நாளைய தினம் சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.