காணி உரிமையாளர் யாரென்று தெரியாது சபையில் விவாதம்!

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் சட்டவிரோதமாக புதிதாக கட்டப்பட்ட கடைக் காணி உரிமம் யாருடையது என தெரியாது, சபையில் மூன்று மணிநேரம் விவாதம் நடத்தி வாக்கெடுப்பு வரை சென்ற சம்பவம் இன்றைய அமர்வின் போது வெளிச்சத்திற்கு வந்தது.

வவுனியா நகரசபையின் நான்காவது அமர்வு இன்று தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது நகரசபை செயலாளர் இ.தயாபரன் சபையில் கடந்த மாதம் 29ம் திகதி எடுக்கப்பட்ட இல.69 ஹொரவப்பொத்தானை வீதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புதிய வியாபார நிலையம் தொடர்பான தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்யுமாறு கடிதம் மூலம் கோரப்பட்டிருந்தார்.

இதற்கமைவாக குறித்த விடயம் தொடர்பான கடிதம் சபையில் வாசிக்கப்பட்டு மீள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது.

இதன்போது வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் இல 69 இல் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருக்கும் மூன்று மாடிகளைக் கொண்ட வியாபார நிலையக் காணி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ளதாகவும், நகரசபையே பராமரித்து வந்ததாகவும், இக் காணியில் ஆரம்பத்தில் மரக்கறிக் கடையும் பின்னர் பாட்டா கடையும் இருந்து தற்போது சட்டவிரோதமாக மூன்று மாடிக் கட்டிடமாக அமைக்கப்பட்டுள்ளது.

நகரசபைக்கு எந்த வித வரிகளும் செலுத்தப்படவில்லை என்பதுடன் பார்த்தீபன் என்பவரது பெயரில் குறித்த வர்த்தக நிலையம் பதிவு செய்யப்படவில்லை என்பதும் செயலாளரின் கடிதத்தின் மூலம் தெரியவந்தது.

இதனையடுத்து காணியை விடுவித்து தருமாறு வவுனியா பிரதேச செயலாளரிடம் கோரிக்கை விடுவதாக சபையில் தீர்மானிக்கப்பட்டதுடன், அதன் முடிவின் பின் கடை வழங்குதல் தொடர்பில் மீள் பரிசீலனை செய்ய தீர்மானிக்கப்பட்டது.

இதன்போது காணி யாருடையது என தெரியாது நாம் விவாதம் நடத்தி வாக்கெடுப்புக்கு சென்றோமா என சபை உறுப்பினர்கள் கூறி வருதப்பட்டனர்.

இதேவேளை, கடந்த மாத அமர்வில் குறித்த வர்த்தக நிலையம் அமைந்துள்ள காணி நகரசபையினது எனவும் குறித்த வர்த்தக நிலையம் பார்த்தீபன் என்பவரால் கடந்த 18 வருடமாக நடத்தப்படுவதாகவும், அதனை அவருக்கே குத்தகை அடிப்படையில் வழங்க வேண்டும் எனவும் நகரசபை உறுப்பினர்களான லரி, பாயிஸ் ஆகியோர் தெரிவித்தனர்.

இந்நிலையில், நகரசபை உறுப்பினர் சு.காண்டீபன் அதனை கடுமையாக எதிர்த்திருந்த நிலையில் மூன்று மணித்தியாலத்திற்கு மேலாக வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று, கடையை குறித்த நபருக்கு வழங்குவதா அல்லது திறந்த கேள்வி கோரல் மூலம் வழங்குவதா என்று வாக்கெடுப்புச் சென்றது.

இதன்போது தமிழர் விடுதலைக் கூட்டணி, ஐக்கிய தேசியக்கட்சி, சிறிலங்கா சுதந்திரக்கட்சி, சிறிலங்கா பொதுஜனபெரமுன, ஈபிடிபி ஆகிய கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் குறித்த வர்த்தக நிலையத்தை சட்டவிரோதமாக கையகப்படுத்தி வைத்துள்ள பார்த்தீபன் என்ற நபருக்கு வழங்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் எதிராக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.