வெளிமாவட்டங்களில் இருந்து வந்து கடலட்டை பிடிப்போரின் அனுமதிகளை ரத்துச் செய்யுமாறு கோரிக்கை

Report Print Kumar in சமூகம்

வெளிமாவட்டங்களில் இருந்து மட்டக்களப்புக்கு வந்து கடலட்டைகளை பிடிப்போரால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், கடல் வளங்களும் அழிக்கப்படுகின்றன.

வெளிநாட்டை சேர்ந்தவர்கள் பெருமளவான படகுகளின் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலையேற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து கடலட்டை பிடிப்போரின் அனுமதிகளை ரத்துச் செய்யுமாறு மீன்பிடி அமைப்புகள் மட்டக்களப்பு மாவட்ட கடல்தொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்திற்கு வருகை தந்து தமது கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

சுவிஸ் கிராமம், நாவலடி, சீலாமுனை முகாமைத்துவ குழு மீனவர் அமைப்பினர் இன்று மட்டக்களப்பு மாவட்ட கடல்தொழில் நீரியல்வளத்துறை திணைக்கள பிரதிப்பணிப்பாளர் றுக்ஸான் சி.குறுசை சந்தித்து தமது கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

வெளிமாவட்டங்களுக்கு கடலட்டை பிடிக்க அனுமதி வழங்கியுள்ளதுடன், வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களின் படகுகளை வைத்து வெளிநாட்டை சேர்ந்தவர்கள் கடல் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் இதன்போது மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் தொடர்ந்தும் மீனவர்கள் தெரிவிக்கையில்,

கடலட்டை பிடிக்கும் வெளிமாவட்ட மீனவர்கள் அதன் சட்டதிட்டங்களை மீறிச் செயற்படுவதன் காரணமாக எதிர்காலத்தில் அந்த வளங்கள் இல்லாமல் போகும் நிலையேற்பட்டுள்ளதாகவும் சினை வைக்கும் கடலட்டைகள். சிறிய வகையிலான கடலட்டைகளையும் அவர்கள் பிடித்துச் செல்கின்றனர்.

நாரா நிறுவனத்தினால் கடல்வளங்களை பாதுகாக்கும் பொறுப்பினை மீனவர்கள் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட கடல்தொழில் நீரியல்வளத்துறை திணைக்கள பிரதிப்பணிப்பாளர் றுக்ஸான் சி.குறுசிடம் கேட்ட போது கடலட்டை பிடிப்பதற்கு மட்டக்களப்பில் உள்ள சில முகாமைத்துவ குழுக்கள் வெளிமாவட்ட மீனவர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளதுடன், தலைமைக் காரியாலய அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், வெளிமாவட்ட மீனவர்களினால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து மீனவர்கள் வழங்கிய மகஜரை கடல்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள தலைமைக் காரியலத்திற்கு அனுப்பி அடுத்த கட்ட நடவடிக்கையெடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.