மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படும் பல உயிரிழப்புக்களை ஏற்படுத்திய பாலம்

Report Print Yathu in சமூகம்

முல்லைத்தீவு ஏ 35 வீதியில் மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படும் வட்டுவாகல் பாலம் இதுவரையில் புனரமைக்கப்படாமையினால், அதனூடாக பயணிப்பவர்கள் விபத்துக்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலையை எதிர்நோக்கியுள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் கூறுகையில்,

முல்லைத்தீவு ஏ 35 வீதியில் நீளமான பாலமாக காணப்படும் வட்டுவாகல் பாலம் இதுவரை புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்றது. இதனால் எந்த நேரத்திலும் விபத்துக்கள் ஏற்படும் அபாயநிலை உள்ளது.

இந்த பாலமானது மிக நீண்டகாலமாக சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது. இதனால் ஏற்கனவே இப்பாலத்தில் பல்வேறு விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளன.

கடந்த ஆண்டின் நடுப்பகுதயில் பாலத்தின் குறிப்பிட்ட பகுதிகள் சேதமடைந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு மாற்றுவழி பாதையூடாக போக்குவரத்து மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இதனையடுத்து சேதமடைந்த பகுதி தற்காலிகமாக புனரமைக்கப்பட்டதை தொடர்ந்து போக்குவரத்துக்கள் பாலத்தினூடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை பாலத்தின் இரண்டு பக்கங்களிலும் காணப்படுகின்ற பாதுகாப்பு தூண்கள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், பாலத்தின் சில பகுதிகளிலும் உடைவுகள் காணப்படுகின்றன.

இவ்வாறு காணப்படுகின்ற பாலத்தினை புனரமைத்து தரவேண்டும் என தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்ற போதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.