தமிழர்கள் உட்பட மற்றுமொரு தொகுதி அகதிகள் அமெரிக்கா பயணம்

Report Print Ajith Ajith in சமூகம்

அமெரிக்காவுக்கும் அவுஸ்திரேலியா இடையே செய்துகொள்ளப்பட்ட அகதிகள் ஒப்பந்தத்தின்படி, நவுறு தடுப்பு முகாமிலுள்ள மேலும் சில அகதிகள் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

அவுஸ்திரேலிய ஊடகமொன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ் இளைஞர்கள் சிலர் உட்பட ஆப்கான், பாகிஸ்தான் மற்றும் ரோஹிங்யா பின்னணி கொண்ட சுமார் 23 பேருக்கு அமெரிக்கா செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டதையடுத்து, அவர்கள் அமெரிக்கா புறப்பட்டுள்ளதாக Refugee Action Coalition அமைப்பு தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கிடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் இதுவரை 300 பேர் அமெரிக்காவில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அமெரிக்கா செல்லும் அகதிகள், அமெரிக்காவின் வெவ்வேறு பகுதிகளில் குடியமர்த்தப்பட்டு, முதல் 3 மாதங்களுக்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் வழங்கப்படும்.

அதேநேரம், ஒரு வருடத்தின் பின் அவர்கள் அங்கு நிரந்தர வதிவிட உரிமை பெறுவதற்குத் தகுதி பெறுவர். இதையடுத்து 5 வருடங்களின் பின்னர் அவர்கள் அமெரிக்க குடியுரிமை பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.