காட்டுயானைகளின் தாக்குதல்கள் அதிகரிப்பு! கடும் அச்சத்தில் மக்கள்

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் காட்டுயானைகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகவும், அவற்றினை கட்டுப்படுத்த நடவடிக்கையெடுக்குமாறும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட நவகிரி 37ம் கிராமத்துக்குள் இன்று அதிகாலை புகுந்த மூன்று யானைகள் நான்கு வீடுகளை சேதப்படுத்தியுள்ளதுடன் வாழை, தென்னை மற்றும் பயிர்ச்செய்கைகளையும் சேதப்படுத்தியுள்ளது.

இன்று அதிகாலை 2.30 மணியளவில் வீடுகளை உடைத்தும் வீடுகளில் இருந்த நெல் மற்றும் கச்சான்களை உண்டும் பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளதுடன் ஒரு குடும்பம் மயிரிழையில் உயிர் தப்பியும் உள்ளது.

பல காலமாக தாங்கள் காட்டு யானைகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகிவருவதாகவும் உயர் அதிகாரிகள் இது தொடர்பில் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த யுத்ததிற்கு பின்னர் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட இப்பகுதி மக்கள் யானைகளின் தொடர்ச்சியான தாக்குதல்கள் காரணமாக பல்வேறு கஸ்டங்களை எதிர்நோக்கிவருவதாக தெரிவிக்கின்றனர்.

தினமும் இரவு வேளைகளை அச்சத்துடனேயே கழித்துவருவதாகவும், மிகவும் கஸ்டத்திற்கு மத்தியில் செய்கைப்பண்ணப்படும் உற்பத்தி பொருட்களை வைத்திருக்கமுடியாத நிலையிருப்பதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

யானையின் தாக்குதலுக்குள்ளான பகுதிகளில் யானைகள் ஊடுருவால் இருப்பதற்கான யானை வேலிகள் அமைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் இதுவரையில் வேலிகள் அமைக்கப்படவில்லையெனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

யானைகள் கிராமங்களுக்குள் வரும்போது வனஜீவராசிகளுக்கு அறிவித்தாலும் வருவதில்லையென தெரிவித்த அப்பகுதி மக்கள் யானைகளிடம் இருந்து தங்களை பாதுகாப்பதற்காக துப்பாக்கிகளை தங்களுக்கு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையினையும் முன்வைத்தனர்.

அத்துடன் யானைகளை துரத்தியடிப்பதற்காக எல்லைப்புற கிராமங்களில் இளைஞர்கள் தெரிவுசெய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களை கடமையில் ஈடுபடுத்தவேண்டும் எனவும் தெரிவித்தனர்.

அதன்மூலம் தமது பகுதிகளை ஓரளவு யானையின் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்ளமுடியும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேநேரம் குறித்த பகுதிக்கு விஜயம் செய்த போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் யோ.ரஜனி பாதிக்கப்பட்ட வீடுகளையும் தோட்டங்களையும் பார்வையிட்டார்.

யானை பிரச்சினைகள் தொடர்பில் உரிய தரப்பினரின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளதாகவும் வேலி அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையிலும் இதுவரையில் அமைக்கப்படவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.