கிழக்கில் வெகு சிறப்பாக இடம்பெற்ற பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள்

Report Print Kumar in சமூகம்

கிழக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், மண்முனை மேற்கு பிரதேச செயலக கலாசாரப் பேரவையும் இணைந்து நடாத்திய பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு நேற்று விளாவட்டவான் ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய முன்றலில் நடைபெற்றது .

அழிந்துவரும் தமிழர்களின் பண்டைய விளையாட்டுக்களை எதிர்கால சந்ததியினருக்கு கொண்டுசெல்லும் வகையில் இந்த விளையாட்டு நிகழ்வு நடாத்தப்பட்டது.

குறிப்பாக யுத்த சூழ்நிலையில் அழிந்த பல்வேறு விளையாட்டுக்கள் இதன்போது நினைவூட்டும் வகையில் நடைபெற்றது சிறப்பம்சமாகும்.

மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் சி.சுதாகர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மண்முனை மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் செ.சண்முகராஜா கலந்து சிறப்பித்தார்.

சிறப்பு அதிதிகளாக வவுணதீவு பிரதேச செயலக கணக்காளர் வே.வேல்ராஜசேகரம், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் த.நிர்மலராஜ் ஆகியோரும் கௌரவ அதிதிகளாக மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்செல்வன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த பாரம்பரிய விளையாட்டு நிகழ்வின்போது வட்டக்காவடி, சங்கிலிப் பிங்கிலி, கொத்திருக்கு கொத்து, தெத்துகௌகோடு, எவடம் எவடம், மொழிக் குண்டு, சுரக்காய் இழத்தல், வார் விளையாட்டு, பில்லி மட்டை விளையாட்டு, கட்டைப் பந்து, கப்பல்கோடு, கிட்டிப் புல்லு, சாரக் கிடுகிடு உட்பட பல்வேறு பாரம்பரிய விளையாட்டுக்கள் இடம்பெற்றன.

பாரம்பரிய முறைப்படி அதிதிகள் வரவேற்கப்பட்டு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் விளையாட்டில் பங்குகொண்டவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.