உலக அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கும் காலநிலை

Report Print Rusath in சமூகம்

உலக அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள கிழக்கு மாகாணமும் தயாராக வேண்டும் என கிழக்கு மாகாண பிரதம செலாளர் டி.எம்.எஸ். அபயகுணவர்தன தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றத்தினால் ஏற்படக் கூடிய பாதகமான பின் விளைவுகளை ஆராய்ந்து மாகாணத்திற்குத் தேவையானவற்றை தேர்ந்தெடுத்து நடைமுறைப்படுத்தக் கூடிய ஒத்திசைவுத் திட்டத்தை முன்மொழியும் கருத்தரங்கு கிழக்கு மாகாண பிரதம செயலாளரின் மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. இக்கருத்தரங்கில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

பல்வேறுபட்ட அபிவிருத்தித் திட்டங்கள், துரித பொருளாதார வளர்ச்சிக்கான முன்னெடுப்புக்கள், மற்றும் இன்னபிற மனித நடவடிக்கைகளினால் உண்டான செயற்கை மாற்றங்களினால் இப்பொழுது இயற்கையின் காலநிலைச் சமநிலையில் தளர்வு ஏற்பட்டு அது பல பாதிப்புக்களைத் தந்து கொண்டிருக்கின்றது.

இது உலகளாவிய சவாலாக உருவெடுத்திருக்கின்ற தற்போதைய சூழ்நிலையில் அதனைத் தணிப்பதற்கும் அந்த சவாலை இயற்கையோடு ஒத்திசைவானதாகவும் நீடித்து நிலைக்கக் கூடியதாக மாற்றுவதற்கும் பிரதேச, மாவட்ட, மாகாண மற்றும் தேசிய மட்ட ஒத்திசைவுத் திட்டங்களை முன்மொழியும் செயலமர்வுகள் இடம்பெறுகின்றன.

இதனை ஒரு சிறந்த வாய்ப்பாகப் பயன்படுத்தி நாமும் கிழக்கு மாகாணத்திற்குத் தோதான காலநிலை மாற்றத்திற்கு ஈடுகொடுக்கக் கூடிய திட்டங்களை முன்வைத்து அவற்றை அமுல்படுத்த வேண்டும்.

காலநிலை மாற்றத்தைப் பற்றிக் கரிசனை கொள்வது மற்றெல்லாத் திட்டங்களையும் விட கரிசனைக்குரிய முன்னுரிமைப்படுத்தக் கூடிய விடயமாக மாறியிருக்கின்றது.

பொருளாதார அபிவிருத்தி, வறுமை ஒழிப்பு, உணவுற்பத்தி, குடிநீர், நீர்ப்பாசனம், சுகாதாரம் சமூக ஸ்திரத்தன்மை என்பவனற்றில் காலநிலையின் தாக்கம் நேரடியாகவும் மறைமுகமாகவும் அதிக பாதிப்புக்களைச் செயலுத்துவதாகக் கண்டறியப்பட்டு உலகம் அதன்பால் தீவிர கவனம் செலுத்தி வருகின்றது.

சமீப காலங்களாக இலங்கையிலும் எதிர்பாராத காலநிலை மாற்றங்களால் இடர்கள் அதிகரித்து ஈடுசெய்ய முடியாத இழப்புக்களை ஏற்படுத்தி வருவதை நாமறிவோம்.

இந்நிலையில் கிழக்கு மாகாணமும் தேசிய மற்றும் சர்வதேச கரிசனையுடன் ஒட்டியதாக தனது திட்டங்களையும் அமுலாக்கங்களையும் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers